
கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் திருநங்கைகளின் குலதெய்வமான கூத்தாண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் கடந்த மாதம் 29ஆம் தேதி சித்திரை திருவிழா தொடங்கிய நிலையில் அரவான் சாமி கண் திறத்தல் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது திருநங்கைகள் அலங்காரம் செய்து கொண்டு பூசாரி கையால் தாலி கட்டிக் கொள்வார்கள். இந்நிலையில் திருநங்கைகள் கூட்டமைப்பு சார்பில் “மிஸ் திருநங்கை 2025 அழகி போட்டி” நடத்தப்பட்டது.
திருநங்கையர் கூட்டமைப்பு மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் மற்றும் தமிழ்நாடு அரசு சமூக நலத்துறை ஆகியவை இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சி விழுப்புரம் கே.கே சாலையில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் 40 திருநங்கைகள் புதுமண பெண்கள் போல அலங்கரித்துக் கொண்டு கலந்து கொண்டனர். முதல் சுற்றில் 25 பேர் தேர்வு செய்யப்பட்ட நிலையில் 2 ம் சுற்றில் 15 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து இறுதி சுற்றில் 7 பேர் தேர்வான நிலையில் அவர்களிடம் எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் பொது அறிவு திறன் பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது. அதில் நெல்லையைச் சேர்ந்த ரேணுகா என்பவர் சிறந்த முறையில் பதில் அளித்ததால் மிஸ் கூவாகமாக தேர்வு செய்யப்பட்டார்.
இதை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் கள்ளக்குறிச்சியை சேர்ந்த அஞ்சனா, 3 வது இடத்தில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆஸ்மிகா தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பரிசுத் தொகை வழங்கப்பட்டு கிரீடம் சூட்டப்பட்டது. மேலும் வெற்றி பெற்ற திருநங்கைகளுக்கு சக திருநங்கைகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.