மகாராஷ்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் பிறந்த காஷிஷ் மெத்வானி, இன்று இந்தியாவின் இளம் பெண்களுக்கு ஒரு மிகப்பெரிய முன்மாதிரியாகத் திகழ்கிறார். விஞ்ஞானியான தந்தைக்கும், ஆசிரியையான தாய்க்கும் பிறந்த இவர், சிறுவயதிலிருந்தே ‘மிஸ் இந்தியா’ மற்றும் ‘தேச சேவை’ ஆகிய இரண்டு பெரிய கனவுகளைத் தனது இரு கண்களாகக் கருதி வந்தார்.

படிப்பில் படுசுட்டியான காஷிஷ், பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) நரம்பியல் துறையில் ஆராய்ச்சி படிப்பை முடித்தவர். உலகப்புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சி செய்ய இவருக்குக் கிடைத்த அரிய வாய்ப்பை, தனது தேச சேவை கனவிற்காகத் துணிச்சலாக நிராகரித்துவிட்டு ராணுவப் பயிற்சியைத் தேர்ந்தெடுத்தார்.

படிப்பு மற்றும் கலைகளில் மட்டுமல்லாமல், 2023-இல் ‘மிஸ் இன்டர்நேஷனல் இந்தியா’ பட்டத்தை வென்று மாடலிங் உலகையும் ஒரு கை பார்த்தார் காஷிஷ். அதன் தொடர்ச்சியாக, பாதுகாப்புத் துறையில் நுழைய வேண்டும் என்ற தனது லட்சியத்திற்காகக் கடுமையாக உழைத்த அவர், 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற CDS தேர்வில் அகில இந்திய அளவில் 2-வது இடத்தைப் பிடித்து ஒட்டுமொத்த தேசத்தையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இதனைத் தொடர்ந்து சென்னை ஆபிஸர்ஸ் பயிற்சி அகாடமியில் 11 மாதங்கள் கடுமையான பயிற்சிகளை முடித்த அவர், கடந்த செப்டம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற அணிவகுப்பு விழாவிற்குப் பிறகு இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்புப் படைப்பிரிவில் லெப்டினன்டாக அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார்.

“மாடலிங் எனக்கு அடையாளத்தைக் கொடுத்திருக்கலாம், ஆனால் இந்த ராணுவ சீருடைதான் எனது வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தந்துள்ளது” எனப் பெருமிதத்துடன் கூறுகிறார் காஷிஷ். பரதநாட்டியம், தபலா வாசிப்பது முதல் துப்பாக்கிச் சுடுதல், கூடைப்பந்து விளையாட்டு வரை பன்முகத் திறமை கொண்ட இவர், கொரோனா காலத்தில் ரத்த தானத்தை ஊக்குவிக்கத் தன்னார்வ நிறுவனத்தையும் தொடங்கிச் சமூக சேவையிலும் முத்திரை பதித்துள்ளார்.

அழகிப் போட்டியின் மேடைகளில் இருந்து போர்க்களத்தின் எல்லைக்குத் தனது பயணத்தைத் திருப்பியிருக்கும் காஷிஷ் மெத்வானியின் இந்த சாதனைப் பயணம், தற்போது சமூக வலைதளங்களில் பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது.