ஓ.பி.எஸ் அணி சார்பில் தொடங்கப்பட்ட”நமது புரட்சித் தொண்டன்”புதிய நாளிதழ்  வெளியீட்டு விழாவில் பேசிய மூத்த தலைவர் பண்ருட்டி இராமச்சந்திரன்,  அருமை நண்பர் ரவீந்திரன் துரைசாமி அவர்கள் ஊடகவியலாளராக தான் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள். நாங்கள் அரசியலில் ஒரு நேரத்தில் ஒரே பயணத்தை மேற்கொண்டோம். அது சமூக நீதிக்காக பயணம். நாங்கள் இருவரும் தோழர்களாக இருந்து பணியாற்றினோம். அதைத்தான் சொன்னேன்….  அவர் எனக்கு காம்ரேட்,  நானும் அவருக்கு காம்ரேட்  என்று…

சமூக நீதி என்றால் ? மிகுந்த அக்கறையும்,  ஆர்வமும் கொண்டவர். ஏற்றத்தாழ்வு மிக்க  சமுதாயத்திலே ஒரு சமத்துவ –  சம வாழ்வு சமுதாயம்  மலர வேண்டும் என்பதற்காக தன்னுடைய அறிவையும், ஆற்றலையும், அனுபவத்தையும் ஒப்படைத்து வருபவர். ஆகவே அவர் இந்த நிகழ்ச்சியிலே கலந்து கொண்டு நமது புரட்சித்தொண்டன்  என்ற நாளிட்டுக்கு வாழ்த்து தெரிவித்திருப்பது ஒரு நல்ல எதிர்காலத்திற்கு அறிகுறி. அவர்களுடைய பணிகளை நான் மனமார பாராட்டுகின்றேன்.

அருமை நண்பர் துரை கருணா அவர்களும்,  நானும் புரட்சித்தலைவர் காலத்திலிருந்து எங்களுக்கு தொடர்பு உண்டு. கழக வரலாற்றை கரைத்து குடித்தவர்கள் என்று சொல்வார்களே… அது நம்முடைய துரை கருணா அவர்கள் தான். எனக்கு ஒரு குறை ஒன்று உண்டு. நானும் துரை கருணா அவர்களும் சேர்ந்து இந்திய அரசினுடைய செய்தி விளம்பர துறை,  புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களை பற்றிய நூலை ஆங்கிலத்திலே தர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள்.

அதை நான் ஆங்கிலத்தில் எழுதினேன், எனக்கு துணையாக அருமை நண்பர்  துரை கருணா அவர்கள் இருந்தார்கள். நாங்கள் அதை டெல்லிக்கு அனுப்பினோம். ஆனால் என்னாயிற்று என்று தெரியவில்லை. கிடப்பில் போட்டு விட்டார்கள். அது எங்களுக்கு ஒரு குறை. அதை அவர் மறந்து இருப்பாரோ,  என்னவோ எனக்கு தெரியாது என உணர்ச்சி பொங்க பேசினார்.