அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி  X தளத்தில் அக்கட்சியினரோடு கலந்துரையாடினார். அப்போது பேசிய அவர்,  உழைப்பே உயர்வு தரும் என்ற நம்முடைய புரட்சித் தலைவரின் பொன்மொழியை மெய்ப்பிக்கும்படி நம்முடைய கட்சி அண்ணா திமுக கட்சி. இங்கு உண்மையாக உழைக்கும் எல்லோருக்கும் உயர்வு நிச்சயம் உண்டு.

அதற்கு நானே ஒரு உதாரண சாட்சி. அடிமட்ட தொண்டனாக நான் கிளை செயலாளராக பொறுப்பேற்றதிலிருந்து கட்சியின் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றியதன் விளைவாகவே இதய தெய்வம் புரட்சி தலைவி அம்மா அவர்களால் 1989இல் எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகின்ற வாய்ப்பை எனக்கு தந்தார்கள்.

இவரென்ன  எம்ஜிஆர்ரா ? இவரென்ன அம்மாவா ? இப்படிப்பட்ட கேள்விகள் சிலர் கேட்பதை நான் நன்கு அறிந்தேன். இதற்கு நானே பல மேடைகளில் பதில் சொல்லி இருக்கின்றேன். இப்போதும் சொல்கிறேன்.  நான் என்றென்றும் புரட்சித் தலைவர்,  புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் தொண்டன். நான் எப்போதும் எடப்பாடி பழனிசாமி தான். சிவதாபுரம் இருந்து வந்த ஒரு சாதாரண விவசாய குடும்பத்தைச் சார்ந்தவன்.

நான் என் உயிருக்கும் மேலாக நேசிப்பதும், மதிப்பதும், நம் அண்ணா திமுக வைத்தான். எனக்கு எல்லாமே இந்த கட்சியும்,  கட்சியின் தொண்டர்களாகிய நீங்களும் தான். இந்த கட்சிதான் நமக்கு எல்லாம் அடையாளம் கொடுத்தது. மக்களுக்காக பணியாற்றக்கூடிய வாய்ப்பையும் பெற்றுத் தந்தது. நான் சில விஷயங்களை உங்களிடம் வெளிப்படையாக சொல்ல விரும்புகின்றேன்.