ஆஸ்திரேலிய அணி இந்தியாவில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் மூன்றாவது போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. அகமதாபாத்தில் தற்போது 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதல் நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா அணி 90 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்து இருந்தது. அதன் பிறகு நேற்று இரண்டாம் நாள் ஆட்ட முடிவில்  ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 167.2 ஓவருக்கு 480 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இந்நிலையில் இன்று தொடங்கிய போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் நிதானமாக விளையாடி வருகிறது. இன்று 3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் குவித்துள்ளது. இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். ரோகித்தின் விக்கெட்டுக்கு பிறகு சுப்மன் கில் புஜாரா ஜோடி நிதானமாக ரன்கள் சேர்த்தார்கள். கில் 194 பந்துகளில் சதம் அடித்து அசத்தார். புஜாரா 42 ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 187 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்தது. இதைத்தொடர்ந்து கில் 128 ரன்னில் LBW ஆகி வெளியேறினார். கோலி 59 ரன்களுடனும் ஜடேஜா 16 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். மேலும் ஆஸ்திரேலியா ஸ்கோரை விட இந்திய அணி 191 ரன்களில் பின்னிலையில் இருக்கிறது.

இந்நிலையில் முதல் இன்னிங்சில் அஸ்வின் வீசிய பந்தில் நாதன் லைன் பவுண்ட்ரி அடிக்கும் முயற்சி செய்தபோது விராட் கோலி கேட்ச் பிடித்தார். இதன் மூலம் தற்போது கோலி ஒரு சாதனை படைத்துள்ளார். அதாவது சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை தற்போது விராட் கோலி பெற்றுள்ளார். அதன்படி விராட் கோலி 300 கேட்ச்களை பிடித்துள்ளார். முதலிடத்தில் 334 கேட்ச்களை பிடித்து ராகுல் டிராவிட் இருக்கிறார். மேலும் சர்வதேச அளவில் இலங்கையின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே 440 கேட்ச்களை பிடித்து முதலிடத்திலும், ரிக்கி பாண்டிங் 364 கேட்ச்களை பிடித்து இரண்டாம் இடத்திலும் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.