கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சூலூர் பகுதியில் தொழிலதிபர் ஒருவர் தனது மகனுக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு பெரிய இடத்தில் பெண் பார்த்தார். அதன்படி இரு வீட்டாரும் பேசி நிச்சயம் செய்தனர். நேற்று முன்தினம் அவர்களுக்கு திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் புதுப்பெண்ணும், மாப்பிள்ளையும் செல்போனில் அடிக்கடி பேசி வந்தனர். இதற்கிடையே தொழிலதிபர் தனது மகனிடம் முகத்தில் தாடியை சவரம் செய்தால் திருமணத்திற்கு நன்றாக இருக்கும் என தெரிவித்தார்.

உடனே வாலிபர் மணமகளை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு முகசவரம் செய்ய உள்ளதாக கூறினார். அதனைக் கேட்ட மருமகள் உங்களுக்கு தாடி தான் அழகாக இருக்கிறது. முகஸ்வரம் செய்யாமல் லேசாக டிரிம் செய்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார். அதனை ஏற்றுக் கொண்ட மணமகன் தந்தை கூறியபடி செய்யாமல் மணப்பெண் கூறியபடி தாடியை டிரிம் செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.

இதனையடுத்து வீட்டிற்கு சென்ற மகனிடம் தொழிலதிபர் ஏன் முக சவரம் செய்யவில்லை எனக் கேட்டபோது முதலில் பதில் அளிக்காமல் இருந்த வாலிபர் பின்னர் வருங்கால மனைவி கூறியபடி செய்ததாக கூறியுள்ளார். இதனை கேட்டு கோபமடைந்த தொழிலதிபர் எனது வார்த்தைகளை மதிக்க தவறி விட்டாய் எனக் கூறி மகனை கண்டித்தார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த மகன் தனது தந்தையை சமாதானப்படுத்த முயன்றார்.

ஆனால் தொழிலதிபர் மகனை வீட்டை விட்டு வெளியே தள்ளி கதவை பூட்டியதால் இரவு முழுவதும் வாலிபர் வெளியே படுத்திருந்தார். இதனை அறிந்த மணமகளின் வீட்டார் தொழிலதிபரை சமாதான செய்ய எடுத்த அனைத்து முயற்சிகளும் வீணானது. நிலைமை கை மீறி போனதால் தொழிலதிபர் சமூக வலைதளத்தில் எனது மகனின் திருமணம் நின்று விட்டது. திருமண மண்டபத்திற்கு யாரும் வர வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த மணமகளின் வீட்டார் அதிர்ச்சியில் உறைந்தனர். திருமணம் நின்று போனதால் உறவினர்கள் சோகத்துடன் திரும்பி சென்றனர்