அமெரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு நடத்திய நபர் 10 பேரை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அமெரிக்க நாட்டின் கலிபோர்னியாவின் தெற்கு பகுதியில் ஒவ்வொரு வருடமும் சீன நாட்டின் சந்திர புது வருட திருவிழா கொண்டாடப்படும். அதில் லட்சக்கணக்கான மக்கள் கூட்டமாக பங்கேற்பார்கள். அவ்வாறு நடைபெற்ற திருவிழாவின் முதல் நாளில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திற்கு அருகில் அமைந்துள்ள மாண்ட்ரே பார்க் என்னும் நகரில் சீன வம்சாவளியை சேர்ந்த செங் வான் சோய் என்ற தொழிலதிபர் வைத்திருக்கும் ஓட்டலில் இரவு நேரத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது.

கோலாகலமாக நடந்த அந்த விழாவில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். மேடையில் ஏறி பலரும் உற்சாகமாக நடனமாடினார்கள். அந்த சமயத்தில் திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் மக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினார். உடனடியாக தீவிர விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்ட ஹூ கேன் திரான் என்ற முதியவரை கண்டுபிடித்து விட்டனர்.

அதன் பிறகு, காவல்துறையினர் அவரை சுற்றி வளைத்தார்கள். அப்போது அந்த குற்றவாளி துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்தார். எனினும், அந்த நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் மேற்கொண்டதன் பின்னணி தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கி சூடு தாக்குதலில் பலியானவர்களை நினைவு கூறும் வகையில், அந்நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்க கட்டிடங்களில் இருக்கும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விட உத்தரவிட்டிருக்கிறார்.