அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் டய்டொனா பீச்சில் உள்ள மருத்துவமனையில் 77 வயதுள்ள நபர் ஒருவர் தீரா நோயால் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவரை கவனித்து கொள்ள அவரது மனைவி (76) அவருடன் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று 76 வயதான மனைவி திடீரென துப்பாக்கியால் தன் கணவனை சுட்டுக் கொன்றுள்ளார்.

இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து   மருத்துவமனையில் இருந்தவர்களை பாதுகாப்பாக வெளியேற்றியுள்ளனர். இதனையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், “கடந்த 3 வாரங்களுக்கு முன் முதியவரின் உடல் நலம் மோசமான நிலை அடைந்ததால்,   தன்னைத் தானே சுடுவதற்கு முயற்சி செய்துள்ளார். ஆனால் அவரால் முடியாத நிலையில், அவரது மனைவியே துப்பாக்கியால் கணவனை சுட்டு, தானும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளார்” என்பது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து போலீசார் மூதாட்டியைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.