ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 2- ஆம் தேதி தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. ஆங்கிலேய ஆட்சியாளர்களை இந்தியாவிலிருந்து விரட்டியடித்து சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தவர் மகாத்மா காந்தி. கடந்த 1920-ஆம் ஆண்டு சென்னைக்கு சென்ற காந்தி திருவல்லிக்கேணி கடற்கரை கூட்டத்தில் பேசியுள்ளார். இதனையடுத்து சென்னையில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், சிதம்பரம், மாயவரம் வழியாக கும்பகோணம் சென்றுள்ளார்.

அனைத்து ரயில் நிலையங்களிலும் அவருக்கு பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நாகூர், நாகப்பட்டினம் திருச்சி ஆகிய நகரங்களில் உரையாற்றிய காந்தி நமது சகோதரர்களை நாம் தீண்ட தகாதவர்களாக கருதினோம் அந்த பாவத்தின் சம்பளமாக தான் என்று அடிமைகளாக இருக்கிறோம் என பேசியுள்ளார். இதனை தொடர்ந்து ஈரோட்டுக்கு பயணம் செய்த போது காந்தி பெரியாரின் இல்லத்திற்கு சென்றுள்ளார்.

கதர் வியாபாரம், கள்ளு கடை மறியல் உட்பட போராட்டங்களில் பெரியாரும், நாகம்மையும் காந்தியடிகளுடன் இணைந்து வேலை பார்த்த தருணங்கள் பற்றி “யங் இந்தியா”வில் காந்தி  எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் ரயில் பயணம் செய்த காந்தி இந்து டீ, முஸ்லிம் டீ என்ற தனித்தனியாக தேநீர் விற்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சியடைந்தார். இதனால் கோபமடைந்த காந்தி ரயில் பயணம் தீய பழக்கங்களை அதிகரிப்பதாக இருக்கக் கூடாது என ஹரிஜன் பத்திரிகையில் எழுதியுள்ளார்.

கடந்த 1915-ஆம் ஆண்டு அகமதாபாத்தில் காந்தி ஆசிரமம் நிறுவினர். அவருக்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு, கதர் தயாரிப்பில் நாட்டம் இருந்ததால் தனது ஆசிரமத்தை கடந்த 1917-ஆம் ஆண்டு சபர்மதி ஆற்றங்கரைக்கு மாற்றினார். இதனால் அது சபர்மதி ஆசிரமம் எனவும், ஒடுக்கப்பட்ட மக்கள் அதிக அளவில் தங்கி இருந்ததால் ஹரிஜன் ஆசிரமம் என்றும் அழைக்கப்பட்டது.

கடந்த 1917-ஆம் ஆண்டு முதல் 1930-ஆம் ஆண்டு வரை காந்தியும் அவரது மனைவி கஸ்தூரிபையும் சபர்மதி ஆசிரமத்தில் தங்கி இருந்தனர். இதனால் சுதந்திரப் போராட்ட வரலாற்றில் முக்கிய பங்கு வகித்த சபர்மதி ஆசிரமம் தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. அன்பு, அகிம்சை, அமைதியை போதித்தது மட்டுமில்லாமல் தனது கொள்கைகளில் இருந்து மாறுபாடு இல்லாமல் நிலையாக இருந்தார்.