நீலகிரி மாவட்டத்திலுள்ள உதகை காந்தல் பகுதியில் இயங்கிவரும் உருது நடுநிலை பள்ளியில் சுமார் 200-க்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ஊட்டச்சத்து மாத்திரையானது வழங்கப்படுகிறது. இம்மாத்திரைகள் தினசரி ஒன்று என மருத்துவ மேற்பார்வையாளர் (அ) பள்ளியிலுள்ள ஆசிரியர்கள் மூலமாக மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த நிலையில் கடந்த 6ம் தேதி இந்த மாத்திரைகள் அதிகளவில் மாணவர்களுக்கு கிடைத்திருக்கிறது.

அப்போது யார் அதிக மாத்திரை சாப்பிடுவது என மாணவ-மாணவிகளுக்கு இடையில் போட்டி நடைபெற்றது. அதில் அதிக மாத்திரை எடுத்துக்கொண்ட 6ம் வகுப்பு மாணவர், 7ம் வகுப்பு மாணவர் மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவிகள் 4 பேருக்கு மயக்கம் ஏற்பட்டது. அதன்பின் அவர்கள் உடனே மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில், மாணவிகளின் உடல்நிலை மோசமானது. இதன் காரணமாக அவர்கள் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

எனினும் ஒரு மாணவி உடல்நிலை மிகவும் ஆபத்தான நிலையில் இருந்ததால், அவரை சென்னைக்கு அனுப்பி வைத்தனர். இருந்தாலும் சென்னைக்கு செல்லும் வழியில் மாணவி பலியானார். இந்த நிலையில் அந்த மாணவி குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதோடு தற்போது சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவேண்டும் என முதல்வர் தெரிவித்து உள்ளார்.