
கர்நாடக மாநிலத்தில் உள்ள தட்சிண கன்னடா மாவட்டத்திலுள்ள பெல்தங்கடி தாலுகா பகுதியை சேர்ந்தவர் அகன்ஷா(22). இவர் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பக்வாராவில் உள்ள எல்.பி.யு பல்கலைக்கழகத்தில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு டெல்லியில் விண்வெளி இன்ஜினியராக கடந்த ஆறு மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்நிலையில் ஜெர்மனிக்கு மேற்படிப்புக்கு செல்வதற்காக சில ஆவணங்களை பெறுவதற்காக பஞ்சாப் கல்லூரிக்கு சென்றுள்ளார். இதனால் கடந்த 16ஆம் தேதி பஞ்சாப் அமிர்தசரசில் உள்ள அவரது பேராசிரியர் வீட்டில் தங்கி மறுநாள் அங்கிருந்து ஒரு நண்பருடன் கல்லூரிக்கு சென்றுள்ளார்.
அன்றைய தினத்தில் திடீரென கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து அகன்ஷா தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த அகன்ஷாவின் பெற்றோர் பதறி அடித்துக்கொண்டு சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் இதுகுறித்து அறிந்த ஜலந்தர் காவல்துறையினர் அகன்ஷாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதன் பின் அகன்ஷாவின் பெற்றோர் அளித்த புகாரின்படி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில், அகன்ஷா தான் படித்த கல்லூரியின் பேராசிரியர் பிஜில் மேத்யூ என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் பிஜில் மேத்யூவுக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இருப்பினும் அகன்ஷா காதலிப்பதாக தொடர்ந்து பிஜில் மேத்யூவை வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேத்யூவின் வீட்டில் தங்கிய அகன்சா தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். ஆனால் அதற்கு மேத்யூ மறுப்பு தெரிவித்துள்ளார். இதனை அடுத்து இரண்டு பேரும் கல்லூரியில் வைத்து மீண்டும் சந்தித்தபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அதனால் மன உளைச்சலுக்கு ஆளான அகன்ஷா கல்லூரியின் நான்காவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மேலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.