கொரோனா தொற்று காரணமாக வெளிநாட்டில் வேலை பார்க்கும் தமிழர்கள் வேலை இழந்தனர். அவர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தில் சுய தொழில் தொடங்கி பொருளாதாரத்துடன் வாழ்க்கை தரத்தை உயர்த்த ஒரு திட்டம் செயல்பட உள்ளது. தமிழ்நாடு அரசு புலம் பெயர்ந்தோர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தை திண்டுக்கல் மாவட்ட தொழில் மையம் அலுவலகம் மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் தொழில் தொடங்க ஆர்வம் இருக்கும் புலம்பெயர்ந்தோர் குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

இதனையடுத்து பொது பிரிவினர் 18 வயது முதல் 45 வயது வரையும், சிறப்பு பிரிவினர் பெண்கள், ஆதிதிராவிட பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், திருநங்கைகள் ஆகியோர் 55 வயது வரையும் இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். அவர்கள் வேலைவாய்ப்பு விசாவுடன் இரண்டு ஆண்டுகளுக்கு குறையாமல் வெளிநாட்டில் வேலை பார்த்திருக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் 01.01.2020 அல்லது அதன் பிறகு வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவராக இருக்க வேண்டும்.

இந்த திட்டத்தில் உற்பத்தி தொழிலுக்கு 15 லட்ச ரூபாயும், சேவை மற்றும் வணிக தொழில்களுக்கு 5 லட்ச ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் திட்ட மதிப்பில் தொழில் முனைவோரின் பங்கீடாக 10 சதவீதம் தொகையை பொது பிரிவினரும், 5 சதவீத தொகையை சிறப்பு பிரிவினரும் செலுத்துவது அவசியம். முக்கியமாக அரசின் மானியத் தொகை திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம் அதிகபட்ச மானிய தொகை ரூபாய் 2,50,000 வரை மானியமாக கொடுக்கப்படும்.

எனவே திண்டுக்கல் மாவட்டத்தில் தொழில் தொடங்க ஆர்வம் இருக்கும் புலம்பெயர்ந்தோர் இந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களுக்கு https//www.msmetamilnadu.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். அப்படி இல்லை என்றால் திண்டுக்கல் மாவட்ட தொழில்நெறி மைய போது மேலாளரை நேரிலோ அல்லது 0451-2471609,2904215 என்ற அலுவலக தொலைபேசி வாயிலாகவோ தெரிந்து கொள்ளலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்குடி தெரிவித்துள்ளார்.