மக்களவை சபாநாயகர் அலுவலகத்திலிருந்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்தி மொழியில் கடிதம் அனுப்பப்பட்டிருப்பதற்கு மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழக மக்கள் பல தலைமுறைகளாக இந்தி திணிப்பைத் தொடர்ந்து எதிர்த்து வரும் நிலையில் மத்திய அரசின் இத்தகைய செயல் மீண்டும் இந்தி திணிப்பை முன்னெடுக்கும் முயற்சியாகவே அமைந்திருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
நாடாளுமன்ற மரபுகளையும் மாநில உரிமைகளையும் மீறி அனுப்பப்பட்டுள்ள இந்தக் கடிதம் தமிழ் மக்களின் மொழி உணர்வை ஆழமாகக் காயப்படுத்தியிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அவர்களின் மாநில மொழி அல்லது தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் கடிதங்கள் அனுப்பப்படுவதே முறையானது என்றும் இத்தகைய ஒருதலைப்பட்சமான செயல்பாடுகள் கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
