சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் நடைபெற்ற காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழ்நிலை இருக்கிறது. எதற்கு எடுத்தாலும் திராவிடர்கள் என்ற வார்த்தையை தான் சொல்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரு ‌ செயல்திட்டம் இருந்தால் அதை தமிழ்நாடு மட்டும் வேண்டாம் என்று எதிர்க்கிறது. தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதே சரியாக இருக்கும். பொய் பரப்புரையை முறியடித்து எது உண்மை என்பதை நாம் மக்களுக்கு நிரூபித்துக் காட்ட வேண்டும்.

பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கம் நாட்டிலுள்ள அனைவரும் ஒரே குடும்பம், அனைவரும் குடும்ப உறுப்பினர்கள் என்பதாகும். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவில் மாநிலங்கள் உருவாக்கப்பட்ட நிலையில், பாரதத்தின் ஒரு பகுதியே தமிழகம். எனவே தமிழ்நாடு என்ற வார்த்தையை விட தமிழகம் என்ற வார்த்தை தான் சரியான முறையில் இருக்கும் என்று கூறினார். ஆளுநரின் இந்த பேச்சு தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில், ஆளுநர் ஆர்.என் ரவிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் டுவிட்டரில் தமிழ்நாடு என்ற ஹேஸ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள். அதோடு தமிழ்நாடு என்ற வார்த்தைக்கு ஆதரவாக பலரும் தங்களுடைய கருத்துக்களை டுவிட்டரில் தெரிவித்து வருகிறார்கள். மேலும் ஆளுநரின் வார்த்தைக்கு எதிராக தமிழ்நாடு என்ற வார்த்தையை தற்போது இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருவது தமிழக அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.