கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஊழியர்கள் பற்றாக்குறையால் அரசு மருத்துவமனைகளில் தொகுப்பூதிய அடிப்படையில் ஒப்பந்த செவிலியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிவிக்கப்பட்ட பணிக்காலமானது கடந்த 2022 டிசம்பர் 31ம் தேதியோடு முடிவடைந்த நிலையில் ஒப்பந்த செவிலியர்களின் பணிக்காலம் மேலும் நீடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அத்தகைய திட்டம் இல்லை என்று அரசு திட்டவட்டமாக தெரிவித்தது. இதனால் அதிருப்தி அடைந்த ஒப்பந்த செவிலியர்கள் தங்களுடைய பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அரசை வலியுறு த்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் செவிலியர்கள் உண்மை நிலையை அறிந்து போராட வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தினார். இதுபற்றி பேசிய அவர், கடந்த ஆட்சியின் போது அவசரகால தேவைக்காக தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்ட அந்த ஒப்பந்த நர்சுகளின் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படவில்லை, இடஒதுக்கீடு விதிமுறை எதுவும் கடைபிடிக்கப்படவில்லை. இந்த சூழ்நிலையில் பணிநிரந்தரம் எப்படி கோர முடியும்? என்று கேள்வி எழுப்பினார்.