
தமிழகத்தில் சென்னை ஐ.சி.எஃப் தொழிற்சாலையில் உருவாக்கப்பட்ட அதிநவீன வந்தே மெட்ரோ ரயில்கள், ரயில் பயணிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்க உள்ளன. இந்த ரயில்கள் 12 பெட்டிகளைக் கொண்டு, 3200 பேர் வரை பயணிக்க வசதியுள்ளது. பயணிகளின் வசதிக்காக குளிர்சாதன வசதி, கைப்பேசி சார்ஜ் செய்யும் வசதி, கழிப்பறை வசதி, தீ உணர்வி கருவிகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் இதில் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான கழிப்பறை வசதி இதன் சிறப்பம்சமாகும்.
இந்த ரயிலின் மிகப்பெரிய சிறப்பு அதன் வேகம் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் ஆகும். அதிக வேகத்தில் செல்வதுடன், உடனடியாக வேகத்தை குறைக்கும் தொழில்நுட்பம் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேலும், கவச் என்ற பாதுகாப்பு அம்சம் இதில் இடம்பெற்றுள்ளதால் பயணிகள் பாதுகாப்பாக பயணிக்கலாம்.
செப்டம்பர் 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி இந்த ரயிலை கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார். குஜராத் மாநிலம் புஜ்- அகமதாபாத் இடையே முதலில் இயக்கப்பட உள்ள இந்த ரயில், பின்னர் பிற மாநிலங்களிலும் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.