சென்னை குடிநீர் வாரியம் வாயிலாக 15 மண்டலங்களுக்கு குழாய் மற்றும் லாரி மூலம் தினசரி 100 கோடி லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் வாயிலாக வருடத்திற்கு 885 கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் எட்டிட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அந்த வகையில் குடிநீர், கழிவுநீர் வரிக் கட்டணம் வருடத்திற்கு இரண்டு முறை வசூலிக்கப்படுகிறது.

இதில் ஏப்ரல் மாதம் முதல் செப்டம்பர் வரை முதல் அரையாண்டாகவும் மற்றும் அக்டோபர் முதல் மார்ச் வரை 2ம் அரையாண்டாகவும் என பிரித்து கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. 2022-23 நிதி ஆண்டில் 885 கோடி ரூபாயும், முந்தைய வருடங்களில் 560 கோடி ரூபாயும் என மொத்தம் 1,445 கோடி ரூபாய் வசூலிக்க வேண்டி உள்ளது.

இவற்றில் வணிகம் சார்ந்த நிறுவனங்களில் 118 கோடி ரூபாயை வசூலிக்க சம்மந்தப்பட்ட நிறுவனங்களில் ஜப்தி, சீல் வைப்பு ஆகிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதோடு பல வருடங்களாக கட்டணம் செலுத்தாமல் உள்ள நிறுவனங்களின் பட்டியலை வெளியிட இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இதேபோன்று தற்போது அரசு துறைகளில் 52 கோடி ரூபாய் வசூலிக்க அனைத்து துறை செயலாளர்களுக்கும் “டெமி அபீஷியல் லெட்டர்” எனப்படும் நேர்முக வேண்டுகோள் கடிதம் அனுப்பி, இதன் வாயிலாக கட்டணத்தை வசூலிப்பதற்கு முடிவுசெய்துள்ளது.