பாகிஸ்தானில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு வருவதால் அத்தியாவசியப் பொருட்கள் குறைந்த அளவில் மட்டுமே இறக்குமதி செய்யப்படுகிறது. இதன் காரணமாக உணவிற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. அதோடு பணவீக்கம் அதிகரித்து காய்கறி, பால், பெட்ரோல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உணவு வாங்ககூட பணம் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இப்போது ரமலான் மாதம் துவங்கியுள்ளதால் இஸ்லாமியர்கள் அனைவரும் நோன்பு கடைபிடித்து வருகின்றனர். இதை கருத்தில் கொண்டு சில தொண்டு நிறுவனங்களும், அரசும் பொதுமக்களுக்கு இலவசமாக கோதுமையை வழங்க முன் வந்துள்ளனர். இதனை வாங்க மக்கள் நீண்டவரிசையில் காத்திருக்கின்றனர்.

அத்துடன் சில இடங்களில் பொதுமக்கள் பொறுமை காக்காமல் ஒருவரை ஒருவர் தள்ளிவிட்டு வாங்குகின்றனர். இந்நிலையில் கராச்சியில் சென்ற வெள்ளிக்கிழமை அன்று இலவச கோதுமை பெற கூட்டநெரிசலில் சிக்கிக்கொண்ட 12 பேர் பரிதாபமாக இறந்தனர். மேலும் சில பேர் காயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இப்படி  உணவிற்காக 12 பேர் இறந்துள்ளனர் என்பது பெரும் வேதனையை அளிக்கிறது.