தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு முதலமைச்சராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில் கரீம் நகரில் அரசு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பாஜக எம் பி பண்டி சஞ்சய் குமார் மற்றும் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் தண்ணீர் விநியோக முறையை திறந்து வைத்தார். அப்போது மாநில வருவாய் துறை அமைச்சர் பொங்குலேடி சீனிவாச ரெட்டி காவல்துறையினரால் பலமுறை ஒதுக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து அவர் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால் அம்மாவட்ட பெண் கலெக்டர் பமீலா சத்பதியை பார்த்து உனக்கு பொது அறிவு இல்லையா? என்ன செய்கிறாய்? என்ன முட்டாள்தனம்? போலீஸ் கண்காணிப்பாளர்கள் எங்கே? என்று கோபத்தில் கேள்வி எழுப்பினார். கலெக்டர் தனது நிலைமையை விளக்க முயன்ற போதும் கூட அவர் தொடர்ந்து தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
