கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள கனியாமூர் பள்ளி மாணவி உயிரிழந்ததை அடுத்து ஏற்பட்ட கலவரம் காரணமாக பள்ளி முழுமையாக மூடப்பட்டிருந்தது. பள்ளியை மீண்டும் திறக்க உத்தரவிடக் கூடிய பள்ளி நிர்வாகம் சார்பாக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், டிசம்பர் 5ஆம் தேதி முதல் ஒரு மாத காலத்திற்கு பள்ளியில்  9, 10, 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக மட்டும் பள்ளியை திறக்க அனுமதி அளித்திருந்தது.

இந்த ஒரு மாத காலத்தில் ஏற்படும் சூழல்களை கருத்தில் கொண்டு அடுத்த கட்டமாக முழுமையாக பள்ளிகளை திறக்க அனுமதி அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த நிலையில் இந்த வழக்கானது இன்றைய தினம் நீதிபதியை கார்த்திகேயன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது பள்ளி திறப்பில் ஆஜரான வழக்கறிஞர் உயர்நீதிமன்ற உத்தரவுபடி 9 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு  பள்ளி திறக்கப்பட்டு, நேரடி வகுப்புகள் நடைபெற்று வரக்கூடிய சூழலில் எந்த விதமான விரும்பாத சம்பவங்கள், பிரச்சனைகள் ஏற்படவில்லை எனவும், மற்ற மாணவர்களுக்காக அதாவது 8ஆம் வகுப்பு முதல் இருக்கக்கூடிய மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்பு நடைபெறுவதால், அது மாணவர்களின் கல்வியை பாதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

எனவே 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிக்கு வர அனுமதிக்க வேண்டுமென வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வருகின்ற காலங்கள் என்பது மிகவும் முக்கியமான காலகட்டம்.   மாணவர்கள் பள்ளிக்கு வரும்போது ஏற்கனவே பள்ளியில்  நடந்த சம்பவம் அவர்கள் மனதில் பதிவாகி இருக்கும்.

அதனை போக்க அவர்களுக்கு என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது ? அவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டதா ?  மனநல ஆலோசனை மருத்துவர்களை  நியமித்திருக்கிறீர்களா ? மாணவர்களின் மனதில் நம்பிக்கை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற கேள்விகளை நீதிபதி எழுப்பினார்.

அதற்கு பதில் அளித்த பள்ளி வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாக ஆசிரியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும்,  அவர்கள் மாணவர்களை கவனித்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்தார். இதனை ஏற்க மறுத்த  நீதிபதி,  ஆசிரியர்களை விட மனநல ஆலோசகர்கள் போன்றவர்களை இவ்வகாரத்தில் தேவைப்படுவதாகவும், அது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய பள்ளி நிர்வாகத்திற்கு  உத்தரவிட்டார்.

அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த ஒரு மாத காலத்தில் நடைபெற்ற நிகழ்வுகள் பள்ளி செயல்படும் விதம் ஆகியவை குறித்து அறிக்கை தாக்கல் செய்வதாக கூறியிருந்தை அடுத்து   வழக்கினுடைய விசாரணையை வரும் பத்தாம் தேதிக்கு ஒத்தி வைத்தார். மாணவர்களுடைய மனதில் நம்பிக்கை ஏற்படுத்துவதற்கான எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பள்ளி நிர்வாகம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.