
பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் பாஜக அரசின் புதிய வேளாண்மை சட்டத்திற்கு எதிராக விவசாயிகள் பல ஆண்டுகளாக போராட்டம் நடத்தி வந்தனர். அப்போது பாஜக அரசுக்கு எதிராக போராடிய விவசாயிகள் அனைவரும் தனிநாடு விரும்பும் காலிஸ்தான் பயங்கரவாதிகள் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு பாஜக எம்.பி கங்கனா கூறியிருந்தார். இந்நிலையில் மீண்டும் கங்கனா விவசாயிகளின் போராட்டத்தை பற்றி பேசி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார்.
நாளிதழ் ஒன்றில் அவர் அளித்த பேட்டியை எக்ஸ் வலைத்தளத்தில் தற்போது அவர் பகிர்ந்து உள்ளார். அந்த வீடியோவில் ” விவசாயிகள் போராட்டத்தை தடுக்க மத்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்காமல் இருந்திருந்தால், வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்கள் இந்தியாவில் நடந்திருக்கும். விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் நடக்கும் குற்றங்களை குறித்து தேசம் அறியாது. போராட்டத்தின் போது பாலியல் வன்கொடுமைகள்,கொலைகள் போன்ற சம்பவங்கள் நடந்தன. அரசு வேளாண்மை சட்டங்களை திரும்ப பெற்றது இல்லையென்றால் அவர்கள் நாட்டில் எதையும் செய்திருக்க கூடும்” என்றும் அவர் கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து கங்கனா பேசிய சர்ச்சைக்குரிய கருத்தை பாஜக கண்டித்துள்ளது. இதில் பாஜகவுக்கும் கங்கனாவின் கருத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பாஜக அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் “கங்கனாவுக்கு கட்சி சார்பில் கொள்கை விஷயங்களை பேச அதிகாரம் இல்லை, அதற்கு அனுமதியும் அவருக்கு வழங்கப்படவில்லை. எதிர்காலத்தில் கங்கனா இது போன்ற கருத்துக்கள் தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும்” என்றும் பாஜக தெரிவித்துள்ளது.