கடலூர் மாவட்டம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு கோவையில் இருந்து மத்திய அதிவிரைவு படையினர் (ஆர்.ஏ.எப்.) துணை கமாண்டர் விஜயன் தலைமையில் 2 இன்ஸ்பெக்டர்கள், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள், 10 பெண் அதிவிரைவு படையினர் உள்பட 85 பேர் நேற்று முன்தினம் வந்துள்ளனர். பின் அங்கு முகாமிட்ட அவர்கள் நேற்று காலை கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வந்து, உட்கோட்டத்தில் சாதி மோதல்கள் உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் நடைபெறும் பகுதிகள் பற்றி துணை போலீஸ் சூப்பிரண்டிடம் கேட்டுள்ளனர்.

அதன்படி மத்திய அதிவிரைவுபடையினர் கடலூர் தேவனாம்பட்டினத்திற்கு உள்ளூர் போலீசாருடன் சென்று ஆய்வு நடத்திய போது, கலவரத்தை கட்டுப்படுத்தும் வாகனம், கருவிகள் மற்றும் நவீன எந்திரங்களுடன் அணிவகுப்பை நடத்தினர். இவர்கள் கடலூர் மாவட்டத்தில் 7 நாட்கள் முகாமிட்டு, பின் சிதம்பரம். நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி போன்ற உட்கோட்ட பகுதிகளுக்கும் சென்று மிகவும் பதற்றமான பகுதிகளை குறித்து ஆய்வு செய்கின்றனர்.

இதனை தொடர்ந்து இந்த அறிக்கையை தமிழக டி.ஜி.பி.க்கும், மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி, மாநில போலீசாரால் கட்டுப்படுத்த முடியாத கலவரங்களை, மத்திய அதிவிரைவு படையினரை உள்துறை அமைச்சகம் அனுப்பி வைத்து கலவரத்தை கட்டுப்படுத்தும். இதற்காக தான் இந்த ஆய்வு நடத்தப்படுகிறது என மத்திய அதிவிரைவு படை கமாண்டர் விஜயன் தெரிவித்துள்ளார்.