அயர்லாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியின் போது, இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை பார்த்தது தெரியவந்துள்ளது.

இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையே டப்ளினில் நடைபெற்ற 2வது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. 3 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. 3வது மற்றும் கடைசி ஆட்டம் ஆகஸ்ட் 23 புதன்கிழமை நடைபெறுகிறது. முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் எடுத்தது. 186 ரன்கள் இலக்கை துரத்திய அயர்லாந்து அணியால் 152 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதன் மூலம் இந்திய அணி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

இப்போட்டியில் ருதுராஜ், சஞ்சு சாம்சன், ரின்கு சிங் மற்றும் ஷிவம் துபே ஆகியோரின் சிறந்த ஆட்டத்தால் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 5 விக்கெட்டுக்கு 185 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய அயர்லாந்து அணி 8 விக்கெட்டுக்கு 152 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது, இதில் ஆண்ட்ரூ பால்பிர்னி 51 பந்துகளில் 72 ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 58 ரன்களையும், சஞ்சு சாம்சன் 26 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உட்பட 40 ரன்களையும் எடுத்தனர். மேலும் ஐபிஎல் நட்சத்திரம் ரிங்கு சிங் 21 பந்துகளில் 2 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 38 ரன்களும், துபே 16 பந்துகளில் 22 ரன்களும் எடுத்தனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற அயர்லாந்து அணி பந்துவீச முடிவு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணியில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் (18) மற்றும் திலக் வர்மா (1) ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்தனர். அதே சமயம், இந்த ஆரம்ப விக்கெட்டுகளுக்கு பிறகு, தொடக்க ஆட்டக்காரரான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணியின் இன்னிங்ஸைக் கையாளும் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். போட்டியில், சஞ்சு சாம்சன் 4-வது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தார், இந்த இடத்தில் அவர் அற்புதமாக பேட்டிங் செய்தார். ருதுராஜும், சாம்சனும் ஆடிக்கொண்டிருந்தனர்.

அப்போது ஆட்டத்தின் 6வது ஓவரில் வர்ணனையாளர்கள் ஜெயிலர் படம் பற்றி பேசினார்கள். அயர்லாந்தில் சாம்சன் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் படத்தை பார்த்ததாக குறிப்பிட்டனர். சஞ்சு சாம்சன் பற்றி வர்ணனையாளர் நியால் ஓ பிரையன், தமிழ் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் புதிய படமான ‘ஜெயிலர்’ படத்தின் முதல் காட்சிக்கு கெளரவ விருந்தினராக இந்திய வீரர் அழைக்கப்பட்டதாக ஆங்கிலத்தில் குறிப்பிட்டார். ஓ’பிரையன் படத்தின் ஒரு காட்சியை பார்த்ததாகவும், அற்புதமாக இருந்ததாக குறிப்பிட்டார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. ‘ஜெயிலர்’ படம் பார்த்ததால் தான் என்னவோ வெறித்தனமாக ஆடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி தமிழ்நாடு மட்டுமில்லாமல் நாடு முழுவதும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளது. இப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன், வசந்த் ரவி, விநாயகன், சிவராஜ்குமார், மோகன் லால், ஜாக்கி ஷெராஃப், சுனில், கிஷோர், தமன்னா, ஜி மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஒளிப்பதிவு விஜய் கார்த்திக் கண்ணன். அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்த பாடல்கள் படம் வெளியாவதற்கு முன்பே ஹிட்டானது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. வெவ்வேறு திரையுலகின் நட்சத்திரங்களுக்கும் ரஜினிகாந்த்தின் ‘ஜெயிலரி’யில் நடித்தது தான் முக்கிய ஈர்ப்பு. மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ரசிகர்களும் படத்தை பார்த்து உற்சாகத்தில் உள்ளனர்.. ‘ஜெயிலர்’ 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.