ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில், 32 வயதான கவிதா என்ற பெண்ணின் உடலில் இருந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு துப்பாக்கித் தோட்டா தானாகவே வெளியே வந்திருக்கும் அதிசயம் அரங்கேறியுள்ளது.

கவிதாவுக்கு 12 வயது இருக்கும்போது, பள்ளியில் தேர்வு எழுதிக் கொண்டிருந்த தருணத்தில் திடீரென முதுகின் கீழ்ப்பகுதியில் ஏதோ ஒரு கூர்மையான பொருள் வந்து பாய்ந்துள்ளது. அப்போது யாரோ கல் எறிந்துவிட்டதாக நினைத்த அவர், லேசான காயத்திற்கு வீட்டில் மஞ்சள் மற்றும் எண்ணெய் தடவி சிகிச்சை பெற்றுள்ளார். காயம் ஆறவே, அவரும் அதை மறந்துவிட்டார். அதன்பின் திருமணம் முடிந்து, தற்போது அவருக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.

இந்த நிலையில், இரண்டு மாதங்களுக்கு முன்பு அதே இடத்தில் ஒரு பெரிய கட்டி (Abscess) தோன்றியுள்ளது. வீட்டு வைத்தியம் செய்தும் சரியாகாத நிலையில், திடீரென அந்தக் கட்டி உடைந்து உள்ளிருந்து ஒரு உலோகப் பொருள் வெளியே வந்துள்ளது.

அதை எடுத்துப் பார்த்தபோது, அது 20 ஆண்டுகளுக்கு முன்பு உடலில் பாய்ந்த எஸ்.எல்.ஆர் (SLR) ரக துப்பாக்கித் தோட்டா என்பது தெரியவந்தது.

மருத்துவ நிபுணர்கள் கூறுகையில், “உடலில் பாய்ந்த தோட்டாவின் வேகம் குறைவாக இருந்ததாலும், உடலில் உள்ள திசுக்கள் அந்தத் தோட்டாவைச் சுற்றி ஒரு பாதுகாப்புச் சுவர் போலப் படர்ந்திருந்ததாலும் இவ்வளவு காலம் அவருக்கு எந்த வலியும் ஏற்படவில்லை” என விளக்கமளித்துள்ளனர். ஆபரேஷன் எதுவுமே இல்லாமல் 20 ஆண்டு கால தோட்டா வெளியே வந்ததை ஒரு அதிசயமாகவே அப்பகுதி மக்கள் பார்க்கின்றனர்.