இந்தியாவின் தேசியப் பறவையான மயிலை காப்பாற்றாமல், விபத்தில் காயமடைந்து தரையில் உதவியற்று கிடந்த ஒரு மயிலின் இறகுகளை கிராம மக்கள் பறித்தெடுத்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் இந்த வீடியோவில், காயமடைந்த மயிலைச் சுற்றி நின்றவர்கள், அதனை காப்பாற்றுவதற்கு பதிலாக இறகுகளை பறித்தெடுக்கும் கொடுமையை வெளிப்படுத்துகிறது.  இந்த மனதை உலுக்கும் காட்சிகள், வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் விலங்கு நேசர்களிடையே கடும் கண்டனத்தை பெற்றுள்ளது.

இச்சம்பவம் நடந்த இடம் துல்லியமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், மயிலுக்கு இந்திய வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் மிக உயர்ந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

“இவர்கள் யார்? இப்படிப்பட்ட கொடூர மனநிலை எப்படி உருவாகிறது?” என ஒருவர் கோபத்துடன் கருத்து தெரிவிக்க, “மனிதநேயம் இறந்துவிட்டது, இந்த உயிரினங்களின் உரிமைகளை பறித்துவிட்டோம்” என மற்றொருவர் வேதனை பகிர்ந்துள்ளார். அதிகாரிகள் இந்த வீடியோவை கவனத்தில் கொண்டு, விசாரணை நடத்தி, ஈடுபட்டவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.