தமிழகச் சட்டமன்றத் தேர்தலைச் சந்திக்கத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தீவிரமாகத் தயாராகி வரும் நிலையில் அக்கட்சியின் வேட்பாளர் நேர்காணல் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்த நிர்வாகிகளை விஜய் நேரில் அழைத்துத் தேர்தலை எதிர்கொள்ளும் விதம் குறித்துக் கேட்டறிந்தார்.

முதற்கட்டமாக இன்று 60 தொகுதி நிர்வாகிகளைச் சந்தித்த அவர் ஒவ்வொரு மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வேட்பாளர்களுடன் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். இதற்கிடையே தமிழக வெற்றிக் கழகம் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இணையப் போவதாக வெளியான தகவல்களை அக்கட்சியின் நிர்வாகிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர்.

இந்த நேர்காணலின் போது பெரம்பூர் தொகுதி குறித்துப் பேசிய விஜய் அந்தத் தொகுதிக்குத் தாமே நேரில் வரப்போவதாகத் தெரிவித்தது அக்கட்சியினரிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே பெரம்பூர் தொகுதியில் விஜய் போட்டியிட வேண்டும் என்று அக்கட்சியின் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சித் தொடங்கப்பட்ட பிறகு நடைபெறும் முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால் நிர்வாகிகளைச் சந்தித்துத் தொகுதி நிலவரங்கள் மற்றும் வெற்றி வாய்ப்புகள் குறித்து விஜய் விரிவாக விவாதித்தார். விஜய்யின் இந்த அதிரடி அரசியல் நகர்வுகள் தமிழக அரசியலில் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.