ஈரான் போர்ச் சூழல் காரணமாக இந்தியாவில் வணிகப் பயன்பாட்டிற்கான எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் இதன் விளைவாக நாடு முழுவதும் உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இக்கட்டான சூழ்நிலையில் எரிவாயு பெறுவதற்கு ஆதார் மூலமான மின்னணு சரிபார்ப்பு முறை கட்டாயம் என்ற செய்தி காட்டுத்தீ போலப் பரவி வரும் நிலையில் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளது.
தற்போது பரவி வரும் செய்திகள் அனைத்தும் ஒரு தனிப்பட்ட பதிவின் அடிப்படையில் உருவானவை என்றும் இது ஒரு புதிய உத்தரவு அல்ல என்றும் அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது. மானிய விநியோகத்தை முறைப்படுத்தவும் முறைகேடுகளைத் தவிர்க்கவும் கடந்த சில காலமாகவே நுகர்வோரை இத்தகைய சரிபார்ப்பு முறையை மேற்கொள்ள அரசு ஊக்குவித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் அசாதாரண சூழலைக் கருத்தில் கொண்டு மானிய நிர்வாகத்தைச் சீரமைக்க அனைத்து வீட்டு உபயோக எரிவாயு பயனர்களுக்கும் உயிரியல் அடையாள ஆதார் சரிபார்ப்பு முறையை ஒரு தேவையாகப் பெட்ரோலிய அமைச்சகம் அமல்படுத்தியுள்ளது.
இந்தியாவில் எரிவாயு விநியோக நிலைமை தற்போது மேம்பட்டுள்ள நிலையில் நுகர்வோர் தங்களின் வீடுகளில் இருந்தபடியே எண்ணெய் நிறுவனங்களின் கைபேசி செயலிகள் மற்றும் ஆதார் முக அங்கீகாரச் செயலி மூலம் இந்தச் சரிபார்ப்பை எளிதாக முடிக்க முடியும் என்று அமைச்சகம் கூறியுள்ளது.
இந்தியன் ஆயில் மற்றும் பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இதற்காகத் தேவையில்லாமல் அச்சப்படத் தேவையில்லை என்றும் மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
