
உலக சுகாதார அமைப்பின் (WHO) ஜெனீவா மன்றத்தில், இந்தியா பாகிஸ்தானை கடுமையாக கடிந்துகொண்டுள்ளது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாக இருக்கும்போது, சர்வதேச அரங்கில் தன்னை ஒரு பாதிக்கப்பட்ட நாடாக காட்டும் முயற்சிக்கு இந்திய தூதர் அனுபமா சிங் கடும் எதிர்ப்பை பதிவு செய்தார்.
“பயங்கரவாதத்தின் ஆதரவாளர்கள் மற்றும் அமைப்பாளர்கள் பாகிஸ்தானின் மண்ணிலிருந்து செயல்படுகிறார்கள் என்பதை நாம் மறக்கக்கூடாது. இந்தியா துல்லியமான மற்றும் விகிதாசாரமான தாக்குதல்களை மேற்கொண்டு, ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் நடவடிக்கையை தொடங்கியது,” என அவர் வலியுறுத்தினார்.
இந்த நடவடிக்கையில் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் கவனிக்கப்பட்டதையும், பாகிஸ்தான் பயிற்சி அளித்த பயங்கரவாதிகளின் மறைவிடங்கள் மட்டுமே குறிவைக்கப்பட்டதையும் அனுபமா சிங் விளக்கினார். மேலும், பாகிஸ்தான் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்த தவறான கதைகளை பரப்பி, சர்வதேச சமுதாயத்தை குழப்ப முயல்கிறது என்றும், இது இன்னும் ஒரு பொய் உத்தியானது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடு தன்னை பலியாக காட்ட முடியாது” என்ற அவரது கூற்று, WHO மன்றத்தில் பாகிஸ்தானை அம்பலப்படுத்தும் வகையில் இருந்தது. இந்த உரையின் மூலம், இந்தியா தனது பதிலடி வியூகம் சர்வதேச அளவில் உருமாறியுள்ளது. அனுபமா சிங், தில்லி பல்கலைக்கழகத்தில் நிதித்துறையில் எம்பிஏ முடித்தவர். மௌலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் கணினிப் பொறியியலில் பட்டம் பெற்றவர்.
2008-2011 காலகட்டத்தில் CFA திட்டத்தையும் முடித்த இவர், KPMG நிறுவனத்தில் ஆலோசகராக பணியாற்றிய அனுபவம் பெற்றவர். தற்போது இந்திய வெளியுறவு சேவையில் 9 ஆண்டுகளுக்கும் மேல் தூதராக பணியாற்றும் அனுபமா சிங், சர்வதேச பேச்சுவார்த்தைகளில் நாட்டின் குரலாக திகழ்வதற்கான திறமை மற்றும் தைரியத்தைக் காட்டியுள்ளார்.