துருக்கியில் கடந்த 2023இல் ஏற்பட்ட நிலநடுக்கத்திற்குப் பின்னர், கேரள அரசு ரூ.10 கோடி நிதியை அந்நாட்டுக்கு உதவியாக அறிவித்தது. இந்நிலையில், இந்தியா மே 2025ல் நடத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கையின்போது துருக்கி, பாகிஸ்தானுக்கு 300க்கும் மேற்பட்ட ட்ரோன்களை வழங்கியிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், இந்த நிதி உதவியை “தவறான தாராள மனப்பான்மை” என விமர்சித்து, கேரள அரசை குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக தனது கருத்தை தெரிவித்த சசி தரூர் கூறியதாவது, “இப்போது துருக்கியின் நடத்தையை 2 ஆண்டுகளுக்குப் பிறகு பார்க்கும்போது, கேரள அரசு இந்தத் தவறான தாராள மனப்பான்மையை சிந்திக்கும் என நம்புகிறேன். வயநாடு மக்களை (கேரளாவின் ஒரு பகுதியாக எடுத்துக்கொண்டால்) அந்த 10 கோடியை இன்னும் பயனுள்ளதாக பயன்படுத்தியிருப்பார்கள் என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை” என்றார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் பரவி, பலரது ஆதரவையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது.

கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி 6ஆம் தேதி, தெற்கு துருக்கியும், வடக்கு சிரியாவும் சந்திக்கும் எல்லை பகுதியில் 7.8 ரிக்டர் அளவிலான கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர் மற்றும் லட்சக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர்.

இந்த பேரழிவுக்கு ஆதரவாக கேரள அரசு பிப்ரவரி 8ம் தேதி தனது பட்ஜெட்டில் ரூ.10 கோடி நிதி உதவியை அறிவித்தது. அந்த நேரத்தில் கேரள நிதியமைச்சர் கே.என். பாலகோபால், “உலகை உலுக்கிய பேரழிவின் பின்னணியில் மனிதநேயத்தை உணர்த்தும் உதவி” என இந்த நடவடிக்கையை விளக்கியிருந்தார்.

ஆனால் தற்போதைய அரசியல் சூழலில், துருக்கி பாகிஸ்தானை இராணுவ ரீதியாக ஆதரித்ததற்குப் பின்னணி தெரியவந்ததால், இந்தியா முழுவதும் துருக்கியைப் புறக்கணிக்க வேண்டுமென்று பல தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக துருக்கி நிறுவனமான Celebi Airport Services India-க்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு அனுமதியையும், இந்திய அரசு ரத்து செய்துள்ளது. இது துருக்கியின் பொருளாதாரத்துக்கு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.