2024 ஐபிஎல் முதல் போட்டியில் ஆர்சிபி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

17வது ஐபிஎல் சீசன் இன்று முதல் தொடங்கியுள்ளது. 2024 ஐபிஎல்லின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் மைதானத்தில் மோதியது. சென்னை அணியில் காயம் காரணமாக டேவான் கான்வே மற்றும் பத்திரனா இருவரும் ஆடாத நிலையில், அவர்களுக்கு பதிலாக ரச்சின் ரவீந்திரா மற்றும் முஸ்தபிசுர் ரஹ்மான் இருவரும் அணியில் இடம் பெற்றனர்.

இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி அந்த அணியின் துவக்கவீரர்களாக கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் விராட் கோலி இருவரும் களமிறங்கினர். இதில் டு பிளெசிஸ் தொடக்கம் முதலே தீபக் சாஹர் ஓவரில் அதிரடியாக பவுண்டரிகளை விளாசினார். ஆர்சிபி அதிரடியாக தொடங்கியது. ஓவருக்கு 10 என்ற சராசரியில் சென்ற நிலையில் முஸ்தபிசுர் ரஹ்மான் வீசிய 5வது ஓவரின்  3வது வந்தில் டு பிளெசிஸ் அடிக்க முயன்று ரச்சின் ரவீந்திரவிடம் கேட்ச் கொடுத்தார்.

டு பிளெசிஸ் 23 பந்துகளில் 8 பவுண்டரி உட்பட 35 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து அதே ஓவரின் கடைசி பந்தில் ரஜத் படிதார் கீப்பர் தோனியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். பின் தீபக் சாஹரின் 6வது ஓவரில் பேட் எட்ஜ் ஆகி மேக்ஸ்வெல் தோனியிடம்  கேட்ச் கொடுத்து டக் அவுட்டானார். இதையடுத்து நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியும் 21 ரன்களில் அவுட் ஆனார். பின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 22  பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவுட் ஆனார். பெங்களூரு அணி 11.4 ஓவரில் 78 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறியது. ஆர்சிபி அணி 150 ரன்கள் எட்டுமா என்ற சந்தேகம் இருந்தது.

அப்போது அனுஜ் ராவத் மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். இருவரும் கடைசியில் அதிரடியாக விளாசி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக  துஷார் தேஷ்பாண்டே வீசிய 18 வது ஓவரில் அனுஜ் ராவத் 2 சிக்சர், ஒரு பவுண்டரி மற்றும் தினேஷ் கார்த்திக் ஒரு சிக்சர் விளாச மொத்தம் அந்த ஓவரில் 25 ரன்கள் சேர்த்தனர். முஸ்தபிசுர் ரஹ்மானின் 19வது ஓவரில் 15 ரன்கள் சேர்க்க, பின் கடைசி ஓவரில் தேஷ்பாண்டே 9 ரன்கள் கொடுத்தார்.

ஆட்டத்தின் இறுதி ஓவரின் கடைசி பந்தில் அனுஜ் ராவத் கீப்பர் தோனியால் ரன் அவுட் ஆனார். அனுஜ் ராவத் 25 பந்துகளில் (4 பவுண்டரி, 3 சிக்ஸ்) 48 ரன்கள் எடுத்தார். தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் (2 பவுண்டரி, 3 சிக்ஸர்) 38 ரன்கள் எடுத்தார். இக்கட்டான நேரத்தில் தினேஷ் கார்த்திக் – அனுஜ் ராவத் இருவரும் சிறப்பாக ஆட ஆர்சிபி அணி நல்ல ஸ்கோரை எட்டடியது. பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் குவித்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் அதிகபட்சமாக முஸ்தபிஷூர் ரஹ்மான் 4  விக்கட்டுகளும், தீபக் சாஹர்  ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிஎஸ்கே அணியின் துவக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் களமிறங்கினர். முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியுடன் தொடங்கினார் ருதுராஜ். மறுபுறம் தனது அறிமுக போட்டியிலேயே ரவீந்திரா பவுண்டரி சிக்ஸர் என விளாசி நன்றாக தொடங்கினார். தொடர்ந்து யாஷ் தயாள் 4வது ஓவரின் கடைசி பந்தில் ருதுராஜ் (15 ரன்கள்) ஸ்லிப்பில் நின்ற கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

இதையடுத்து அஜிங்யா ரஹானே மற்றும் ரச்சின் ரவீந்திரா இருவரும் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். தொடர்ந்து கரன் சர்மாவின் 7வது ஓவரின் 5வது பந்தில் சிக்ஸர் விளாசிய ரவீந்திரா கடைசி பந்தில் சிக்சர்அடிக்க முயன்று ரஜத் படிதாரிடம் கேட்ச் கொடுத்தார். ரவீந்திரா 15 பந்துகளில் 3 பவுண்டரி, 3 சிக்ஸர் உடன் 37 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து களமிறங்கிய டேரில் மிட்செல் கரன் சர்மாவின் 9வது ஓவரில் 2 சிக்ஸர்களை பறக்கவிட்டார். பின் ரஹானே கேமரூன் கிரீனின் 11வது ஓவரின் முதல் பந்தில் சிக்ஸர் விளாசி அடுத்த ஓவரில் மேக்ஸ்வெல்லிடம் ஸ்கொயர் லெக்கில் கேட்ச் ஆனார்.ரஹானே 19 பந்துகளில் 27 ரன்களில் வெளியேறினார். தொடர்ந்து டேரில் மிட்செல்    22 ரன்களுக்கு வெளியேற சென்னை அணி 12.3 ஓவரில் 110/4 என இருந்தது. இதையடுத்து சிவம் துபே மற்றும் ஜடேஜா இருவரும் ஜோடி சேர்ந்துபொறுப்பாக ஆடி அணியை வெற்றிபெற செய்தனர்.

சிவம் துபே 28 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் உட்பட 34 ரன்களுடனும், ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்களுடனும்  அவுட் ஆகாமல் இருந்தனர். சென்னை அணி 18.4 ஓவரில் 176 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்சிபி அணியில் கேமரூன் கிரீன் அதிகபட்சமாக 2 விக்கெட் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் வெற்றியுடன் தனது கேப்டன்சியை தொடங்கியுள்ளார் ருதுராஜ் கெய்க்வாட். சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டியில் எம்எஸ் தோனி வெற்றி பெற்ற பிறகு ருதுராஜ் கெய்க்வாட் 2வது சிஎஸ்கே கேப்டனானார். தொடர்ந்து 16வது ஆண்டாக சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஆர்சிபிக்கு எதிராக சிஎஸ்கே தோற்கடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.