மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்..

மும்பை இந்தியன்ஸ் இறுதியாக அந்த பெரிய அறிவிப்பை வெளியிட்டது. 2013-ம் ஆண்டு முதல் அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா இனி கேப்டன் பதவியில் இருக்க மாட்டார். மும்பை இந்தியன்ஸ் கிரிக்கெட்டில் ஹர்திக் பாண்டியா சகாப்தம் ஆரம்பமாகி விட்டது. 2024 ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியை இந்திய ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா வழிநடத்துவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு புதிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் ரோஹித்தின் 10 வருட கேப்டன் பதவி முடிவுக்கு வருகிறது. முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த ஹர்திக் பாண்டியாவை 2 சீசன்களுக்கு முன்பு குஜராத் டைட்டன்ஸ் அணி கைப்பற்றியது. அந்த 2022 ஐபிஎல் சீசனில் ஹர்திக் பாண்டியா தலைமையில் குஜராத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணி கடந்த சீசனில் (2023 ஐபிஎல்) இரண்டாம் இடத்தைப் பிடித்தது.

ஐபிஎல் தொடரில் அதிக சாம்பியன் பட்டங்களை வென்ற கேப்டன்கள் பட்டியலில் ரோகித் சர்மா மற்றும் தோனி ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். ரோஹித் கேப்டனாக இருந்த முதல் சீசனில் மும்பை தனது முதல் ஐபிஎல்  பட்டத்தையும் வென்றது.  குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக இருந்த பாண்டியாவை டிரேடிங் மூலம் மும்பை அணி வாங்கியது. ஏற்கனவே இந்திய டி20 அணியை பாண்டியா வழிநடத்தி வருகிறார். தற்போது ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டதால்   சூர்யகுமார் யாதவ் இந்திய அணியின்  கேப்டனாக உள்ளார். ஆஸி.யின் ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை ஆர்சிபிக்கு வழங்கியது மற்றும் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் இருந்து மும்பைக்கு அழைத்து வரப்பட்டார்.

“எதிர்காலத்தைப் பாதுகாக்கும் மும்பை இந்தியன்ஸ் சித்தாந்தத்தின் ஒரு பகுதியாக இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மும்பையை சச்சின், ரிக்கி பாண்டிங், ஹர்பஜன், ரோஹித் போன்ற ஜாம்பவான்கள் வழிநடத்தினர். இங்கு நல்ல தலைமைக்கு பஞ்சமில்லை. ரோஹித் ஷர்மாவின் அற்புதமான கேப்டன்ஷிப்பிற்காக நாங்கள் அவருக்கு நன்றி கூறுகிறோம், ”என்று ஜெயவர்த்தனே கூறினார்.

2013 சீசனின் நடுப்பகுதி முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இருந்தார். முன்னதாக, டெக்கான் சார்ஜர்ஸ் அணியுடன் ரோஹித் ஐபிஎல் பட்டத்தை வென்றிருந்தார். ரோஹித்தின் வருகையால் மும்பை ஐபிஎல்லில் வலுவான அணியாக மாறியது. நட்சத்திர வீரர் ரோஹித்தின் தலைமையின் கீழ் 5 முறை சாம்பியன் பட்டத்தையும் வென்றது மும்பை அணி.. இருப்பினும் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதை மும்பை அணியின் ரசிகர்கள் விரும்பவில்லை என தெரிகிறது..