ஐபிஎல் 2026 சீசன் தொடங்க உள்ள நிலையில், கடந்த 18 சீசன்களில் இறுதிப்போட்டியில் விளையாடி ஒருமுறை கூட தோல்வியைத் தழுவாத வீரர்களின் பட்டியல் வெளியாகி ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ரோகித் சர்மா.
மேலும் இவர் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகளுக்காக மொத்தம் 6 முறை இறுதிப்போட்டிகளில் விளையாடி, அந்த ஆறிலும் வெற்றி பெற்று 100 சதவீத வெற்றி விகிதத்துடன் சாதனை படைத்துள்ளார். இவரைத் தொடர்ந்து க்ருணால் பாண்ட்யா 4 முறையும், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தலா 3 முறையும் இறுதிப்போட்டியில் களமிறங்கி அனைத்திலும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.
மேலும், இந்தப் பட்டியலில் ருதுராஜ் கெய்க்வாட், கவுதம் கம்பீர், இஷான் கிஷன், குவின்டன் டி காக் மற்றும் மொயீன் அலி உள்ளிட்ட 12 வீரர்கள் தலா 2 முறை இறுதிப்போட்டியில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுத் தோல்வியே காணாத வீரர்களாகத் திகழ்கின்றனர்.
இதனால் ஐபிஎல் வரலாற்றில் பல ஜாம்பவான்கள் பலமுறை இறுதிப்போட்டிக்குச் சென்றும் தோல்வியைச் சந்தித்துள்ள நிலையில், ஒருமுறை கூட தோற்காமல் கோப்பையை வென்ற இந்த வீரர்களின் புள்ளிவிவரங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வரும் மார்ச் 28-ம் தேதி தொடங்கவுள்ள புதிய சீசனிலும் இந்த வீரர்கள் தங்களது வெற்றிப் பயணத்தைத் தொடர்வார்களா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
