நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ந்து பெரியாரைக் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதனால் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். அதோடு அவரது வீட்டை முற்றுகையிடும் போராட்டமும் நடைபெற்றது. இந்த விவகாரத்தில் சீமான் தொடர்ந்து பெரியாரை குறித்து பல்வேறு அவதூறான கருத்துக்களை தெரிவித்து வருகிறார். அதுமட்டுமின்றி பெரியார் மற்றும் பிரபாகரன் இருவரையும் ஒப்பிட்டு சீமான் பேசியது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் பிரபாகரனையும், பெரியாரையும் கொச்சைப்படுத்துவதை உலக தமிழர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, குறுகிய அரசியல் ஆதாயத்திற்காக பெரியாரையும், பிரபாகரனையும் எதிரெதிரே நிறுத்த முயற்சி செய்கின்றார். பெண்ணுரிமைக்காக போராடியவர் பெரியார். அந்த கொள்கையை நிறைவேற்றும் வகையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் பெண்களையும் சேர்த்து ஆயுதப் பயிற்சியை கற்றுக்கொடுத்து களத்தில் போராட வைத்து அவரது கொள்கையை நிறைவேற்றியவர் பிரபாகரன் என்று கூறினார்.