இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் 163 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் இந்தியா -இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் இரவு 7:00 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணியின் துவக்க வீரர்களாக இஷான் கிசான் மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே இஷான் கிசான் ஒரு சிக்ஸ் 2 பவுண்டரி என விளாச 17 ரன்கள் கிடைத்தது. இதையடுத்து  தீக்ஷனா வீசிய 3ஆவது ஓவரில் கில் (7 ரன்கள்) அவுட் ஆனார். அதை தொடர்ந்து வந்த சூர்யகுமார் யாதவும் (7 ரன்கள்) கருணாரத்னே வீசிய 6ஆவது ஓவரில் அவுட் ஆனார்.

அதன்பின் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் இந்திய அணியின் ரன் வேகம் குறைந்தது. இதையடுத்து இஷான் கிஷன் – ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர். அதைத்தொடர்ந்து பொறுப்பாக ஆடிவந்த இஷான் கிஷனும்  29 பந்துகளில் 37 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இதையடுத்து பொறுமையாக ஆடிவந்த கேப்டன் ஹர்திக் பாண்டியாவும் 29 ரன்னில் அவுட் ஆனார். இந்திய அணி 14.1 ஓவரில் 94/5 ரன்கள் எடுத்திருந்தது. பின் தீபக் ஹூடா மற்றும் அக்சர் படேல் கைகோர்த்தனர். கடைசியில் தீபக் ஹூடா அதிரடி காட்டினார். தீக்ஷனா வீசிய 16ஆவது ஓவரில் ஹூடா 2 சிக்ஸர் பறக்கவிட 17 ரன்கள் கிடைத்தது. அதேபோல் அக்சர் படேலும் சற்று அதிரடி காட்டினார். ரஜிதா வீசிய கடைசி ஓவரில் இந்திய அணி 13 ரன்கள் எடுத்தது. இருவரும் சேர்ந்து சிறப்பாக ஆடி 50 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

இதனால் தான் இந்திய அணி  20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழந்து 162 ரன்கள் என்ற சவாலான ஸ்கோரை எடுத்தது. தீபக் ஹூடா 23 பந்துகளில் (4 சிக்ஸ், ஒரு பவுண்டரி) 41* ரன்களுடனும், அக்சர் படேல் 31* (20) ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். இலங்கை அணியில் தீக்ஷனா, மதுஷங்கா, கருணாரத்னே, தனஞ்செய டி சில்வா, ஹசராங்கா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது இலங்கை அணி களமிறங்கி ஆடி வருகிறது.