பாகிஸ்தான் மகளிர் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது..

8வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. கடந்த 10ஆம் தேதி தொடங்கி, பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் 2பிரிவுகளாக 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம் ஆகிய 5 அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய 5 அணிகளும் இடம் பெற்றுள்ளன. லீக் சுற்றின் முடிவில் இரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இந்நிலையில் 4வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணி இந்திய நேரப்படி மாலை 6:30 மணி முதல்  கேப்டவுனில் விளையாடி வருகிறது. இதில் இந்திய தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ஸ்மிருதி மந்தனா, பயிற்சி ஆட்டத்தின் போது இடது விரலில் ஏற்பட்ட காயத்தில் இருந்து இன்னும் மீளாததால் போட்டியிலிருந்து  விலகியுள்ளார்.

இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணியின் துவக்க வீராங்கனைகளாக முனீபா அலி மற்றும் ஜவேரியா கான் ஆகியோர் களமிறங்கினர். இதில் தீப்தி ஷர்மாவின் 2வது ஓவரில் ஜவேரியா கான் 8 ரன்னில் அவுட்டானார்.. அதனைத் தொடர்ந்து கேப்டன் பிஸ்மா மரூஃப் மற்றும் முனீபா அலி ஜோடி சேர்ந்து சற்று பொறுப்பாக ஆடியது. பின் பவர் பிளே முடிவிற்கு பின் ராதா யாதவ் வீசிய 7வது ஓவரில் விக்கெட் கீப்பர் ரிச்சா கோஷால் முனீபா அலி(12) ஸ்டெம்பிங் செய்யப்பட்டார்.. இதையடுத்து வந்த நிடா தார் 0, சித்ரா அமின் 11 ரன்களில் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். பாகிஸ்தான அணி 12.1 ஓவரில் 4 விக்கெட் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.

அப்போது கேப்டன் பிஸ்மா மற்றும் ஆயிஷா நசீம் இருவரும் ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். குறிப்பாக  ரேணுகா சிங் வீசிய 11வது ஓவரில் ஆயிஷா நசீம் இன்னிங்சின் முதல் சிக்ஸ் மற்றும்  ஒரு பவுண்டரி  அடித்தது மட்டுமல்லாமல் அந்த ஓவரில் 3 வொயிடு பால், சிங்கிள் என மொத்தம் 18 ரன்கள் கிடைத்தது. மேலும்  மறுமுனையில் பொறுப்பாக ஆடிவந்த பிஸ்மா அரைசதம் கடந்தார்.. பின் ராஜேஸ்வரி வீசிய கடைசி 19 வது ஓவரில்  5வது பந்தில் ஆயிஷா கேட்ச் கொடுத்தார். அதை ராதா கோட்டை விட்டார்.

மேலும் அந்த ஓவரில் 10 ரன்கள் கிடைத்தது. தொடர்ந்து தீப்தி சர்மா வீசிய கடைசி ஓவரின் 2வது பந்தை  ஆயிஷா நசீம் தூக்கியடிக்க,அது எல்லைக்கோடு அருகே நின்ற பீல்டர் கையில் பட்டு சிக்ஸ் சென்றது.  அதோடு அந்த ஓவரில் பிஸ்மா ஒரு பவுண்டரி  அடிக்க, மொத்தம் 12 ரன்கள் கிடைத்தது. இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழந்து 149 ரன்கள் குவித்தது. பிஸ்மா 55 பந்துகளில் (7 பவுண்டரி) 68 ரன்களும், ஆயிஷா 25 பந்துகளில் (2 பவுண்டரி, 2 சிக்ஸ்) 43 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர்.. இந்திய அணியில் ராதா யாதவ் அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளும், தீப்தி சர்மா மற்றும் பூஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். தற்போது இந்திய அணி களமிறங்கி ஆடி வருகிறது.