
இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி தொடர் மழை காரணமாக நிறுத்தப்பட்டு, நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை 2023 இன் சூப்பர் 4 சுற்றில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இந்த சூப்பர் ஃபோர் சுற்றில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஷாகின் அப்ரிடியின் முதல் ஓவரில் 5 பந்தில் ரன் எடுக்காத நிலையில், கடைசி பந்தில் சிக்சர் உடன் அதிரடியாக தொடங்கினார். அதேபோல மறுபுறம் கில் பவுண்டரிகளாக அடித்து மிரட்டினார். முதலில் மெதுவாக ஆரம்பித்த ரோகித் சர்மா பின் சதாப்கான் ஓவரில் சிக்ஸர்களாக விளாசினார். தொடர்ந்து இருவருமே சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இந்திய அணி 100 ரன்களை கடந்தது. பின் ரோகித் சர்மா ஷதாப் கான் வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஷஹீன் அப்ரிடியின் 18வது ஓவரில் கில் அவுட் ஆனார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர்.
அப்போது திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. மைதானம் தார்பாயால் மூடப்பட்டது. மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் மழை நின்ற நிலையில், மைதானத்தை ஊழியர்கள் சரிசெய்தனர். ஆனால் மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான நாளை பிற்பகல் 3 மணிக்கு போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இதனிடையே கடந்த 2 போட்டியில் கே எல் ராகுல் காயத்தால் ஆடாத நிலையில், இந்த போட்டியில் ஷ்ரேயஸ் ஐயருக்கு (முதுகுவலி காரணமாக) பதிலாக அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல் பும்ரா அணிக்கு திரும்பியதால் முகமது ஷமி வெளியேறினார். இன்று டாஸ்க்கு வந்த ரோஹித் ஷர்மா, ஸ்ரேயார் ஐயருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் அவருக்குப் பதிலாக கேஎல் ராகுலுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்படுவதாகவும் கூறினார்.
பாகிஸ்தானின் ஆடும் 11 :
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான் (துணை கேப்டன்), ஃபகார் ஜமான், இமாம்-உல்-ஹக், ஆகா சல்மான், இப்திகார் அகமது, முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), ஃபஹீம் அஸ்ரஃப், நசீம் ஷா, ஷஹீன் அப்ரிடி மற்றும் ஹாரிஸ் ரவூப்.
டீம் இந்தியாவின் ஆடும் 11 :
ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஷர்துல் தாகூர், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.
UPDATE – Play has been called off due to persistent rains 🌧️
See you tomorrow (reserve day) at 3 PM IST!
Scorecard ▶️ https://t.co/kg7Sh2t5pM #TeamIndia | #AsiaCup2023 | #INDvPAK pic.twitter.com/7thgTaGgYf
— BCCI (@BCCI) September 10, 2023