கேஎல் ராகுல் ஒருநாள் போட்டிகளில் 2 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்..

2023 ஆசியகோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் இடையே சூப்பர் 4 போட்டி கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி  இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தப் போட்டியில் இந்தியா சார்பில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் ஆகியோர் அபாரமாக பேட்டிங் செய்து அரைசதம் அடித்தனர். அதேசமயம், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய அணிக்கு திரும்பிய கே.எல்.ராகுல், திரும்பியதன் மூலம் தனது பெயரில் பெரிய சாதனையைப் படைத்துள்ளார். பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில், அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் வாழ்க்கையில் 2 ஆயிரம் ரன்களை கடந்துள்ளார்.

கேஎல் ராகுல் 2 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்தார் :

இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல் ராகுல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 17 ரன்கள் அடித்ததன் மூலம் ஒருநாள் போட்டிகளில் 2,000 ரன்களைக் கடந்த இந்தியாவின் 3வது வேகமான பேட்ஸ்மேன் என்ற பெருமையைப் பெற்றார். கே.எல்.ராகுல் தனது 53வது ஒருநாள் இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்தினார். ராகுலுக்கு முன், விராட் கோலியும் தனது 53வது ஒருநாள் இன்னிங்சில் 2 ஆயிரம் சர்வதேச ரன்களை கடந்திருந்தார். சுவாரஸ்யமாக, ராகுல் இந்த சாதனையை அடையும் போது, ​​விராட் கோலியே நான்-ஸ்ட்ரைக்கர் எண்டரில் நின்று கொண்டிருந்தார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 2000 ரன்களைக் கடந்த இந்திய பேட்ஸ்மேன்களின் பட்டியலைப் பார்த்தால், இந்தப் பட்டியலில் ஷிகர் தவான் முதலிடத்தில் உள்ளார்.  48 இன்னிங்ஸ்களில் தவான்கடந்துள்ளார். நவ்ஜோத் சிங் சித்து மற்றும் இந்திய அணியின் முன்னாள் கேப்டனும் மூத்த பேட்ஸ்மேனுமான சவுரவ் கங்குலி ஆகியோர் கூட்டாக 2வது இடத்தில் உள்ளனர். இருவரும் 52 இன்னிங்ஸ்களில் 2 ஆயிரம் ஒருநாள் ரன்களை கடந்தனர். கே.எல். ராகுல் இப்போது பாகிஸ்தானுக்கு எதிராக ஒரு பெரிய இன்னிங்ஸை விளையாட விரும்புகிறார். முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து வெளியேறிய ஸ்ரேயாஸ் ஐயருக்குப் பதிலாக ராகுலுக்கு இன்றைய போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் சூப்பர் 4 போட்டி நிலவரம் :

இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் துவக்க வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சுப்மான் கில் இருவரும் களமிறங்கினர். ரோகித் சர்மா ஷாகின் அப்ரிடியின் முதல் ஓவரில் 5 பந்தில் ரன் எடுக்காத நிலையில், கடைசி பந்தில் சிக்சர் உடன் அதிரடியாக தொடங்கினார். அதேபோல மறுபுறம்  கில் பவுண்டரிகளாக அடித்து மிரட்டினார். முதலில்  மெதுவாக ஆரம்பித்த ரோகித் சர்மா பின் சதாப்கான் ஓவரில் சிக்ஸர்களாக விளாசினார். தொடர்ந்து இருவருமே சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தனர்.

இந்திய அணி 100 ரன்களை  கடந்தது. பின் ரோகித் சர்மா ஷதாப் கான் வீசிய 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து ஷஹீன் அப்ரிடியின் 18வது ஓவரில் கில் அவுட் ஆனார். இந்திய கேப்டன் ரோஹித் சர்மா 49 பந்துகளில் (6 பவுண்டரி, 4 சிக்ஸர்) 56 ரன்களும், கில் 52 பந்துகளில் (10 பவுண்டரி) 58 ரன்களும் எடுத்து நல்ல துவக்கத்தை கொடுத்துள்ளனர். அதன் பிறகு விராட் கோலி மற்றும் கே எல் ராகுல் இருவரும் ஜோடி சேர்ந்து ஆடிவந்தனர்.

அப்போது திடீரென மழை வந்த காரணத்தால் போட்டி நிறுத்தப்பட்டது. மைதானம் தார்பாயால் மூடப்பட்டது. மழை நின்றபின் போட்டி மீண்டும் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதலில் மழை நின்ற நிலையில், மைதானத்தை ஊழியர்கள் சரிசெய்தனர். நடுவர்கள் மைதானத்தை ஆய்வு செய்தனர். மைதானத்தில் ஈரப்பதம் இருந்த காரணத்தாலும்,  மீண்டும் மழை வந்த காரணத்தால் ரிசர்வ் டேவான நாளை பிற்பகல் 3 மணிக்கு  போட்டி விட்ட இடத்திலிருந்து தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்திய அணி 2 விக்கெட் இழந்து 24.1 ஓவரில் 147 ரன்கள் எடுத்துள்ளது. தற்போது கோலியும் (8* ரன்கள்), ராகுலும் (17* ரன்கள்) ஆட்டமிழக்காமல் உள்ளனர்.