
பெங்களூருவில் உள்ள ஜவாஹர்லால் நேரு மேம்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மையம் (JNCASR) அமைப்பில் பணியாற்றும் ஆராய்ச்சியாளர்கள் குழு, மிக வேகமாக சார்ஜ் ஆகும் சோடியம்-அயன் பேட்டரியை (SIB) வெற்றிகரமாக உருவாக்கியுள்ளதாக மே 19 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேட்டரி, லித்தியம் பயன்படுத்தும் தற்போதைய பேட்டரிகளுக்கு மாற்றாக திகழக்கூடியது என்றும், ஆற்றல் சேமிப்பு தொழில்நுட்பத்தில் இந்தியாவை சுயநிலையாக்க உதவக்கூடியதாக இருக்கிறது. இது, ஆத்மநிர்ப்பர் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு முக்கிய முன்னேற்றமாக கருதப்படுகிறது.
இந்த புதிய பேட்டரி, ‘NASICON வகை’ காத்தோடு மற்றும் அனோடு பொருட்களை அடிப்படையாகக் கொண்டது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால், 6 நிமிடங்களில் 80% வரை சார்ஜ் ஆகும் திறன் கொண்டதும், 3,000 முறை சார்ஜ் சுழற்சிகள் வரை நீடிக்கும் தன்மை கொண்டதுமாக இருக்கிறது.
பொதுவான சோடியம் பேட்டரிகள் எதிலும் காணப்படும் மெதுவான சார்ஜிங் மற்றும் குறைந்த ஆயுள் ஆகிய சிக்கல்களுக்கு மாற்றாக, இந்த புதிய பேட்டரி நானோ அளவுக்கு தனிமங்களைச் சுருக்கி, கார்பன் பூச்சு கவர்கள் மூலம் பாதுகாப்பு தரப்பட்டதும், சிறிய அளவு அலுமினியம் சேர்த்து செயல்திறன் மேம்படுத்தப்பட்டதும் என மூன்று முக்கியமான முறைகளில் விருத்தி செய்யப்பட்டுள்ளது.
பிரொஃபசர் பிரேம்குமார் செங்குத்துவன் மற்றும் பிஎச்.டி மாணவர் பிப்லப் பாத்ரா தலைமையிலான குழுவால் இந்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது, இந்தியாவுக்குள் எளிதாகக் கிடைக்கும் சோடியம் வளங்களைப் பயன்படுத்தி, குறைந்த செலவில், வேகமாகவும் பாதுகாப்பாகவும் சார்ஜ் செய்யக்கூடிய பேட்டரி தொழில்நுட்பத்திற்கு வழிவகுக்கிறது. இந்த பேட்டரிகள், மின்சார வாகனங்கள், சூரிய சக்தி பிணையங்கள், கிராமப்புற வீடுகள், டிரோன்கள் என பல்வேறு துறைகளில் பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
தீப்பற்ற மற்றும் சிதைவு அபாயம் இல்லாத தொழில்நுட்பம் என்பதும் இதன் மேலும் ஒரு சிறப்பம்சமாகும். தற்போது தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் வன்மையான சுழற்சி பரிசோதனைகள் மூலம் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. சந்தையில் இது அறிமுகமாகும் வரை மேலும் சில வளர்ச்சிகள் தேவைப்படுவதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை தெரிவித்துள்ளது.