ஹரியானா மாநிலத்தில் உள்ள பானிப்பட்டில் தொழிற்சாலை பாதுகாப்பு காவலராக பணியாற்றிய உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், பாகிஸ்தானை சேர்ந்த நபருக்கு முக்கிய  தகவல்களை கசியவிட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டம் கைரானாவைச் சேர்ந்த 24 வயது நௌமான் இலாஹி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது குறித்து பேசிய கர்னல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கங்கா ராம் புனியா கூறியதாவது, நம்பத்தகுந்த உளவுத்துறையின் தகவலின் அடிப்படையில் இலாஹி மீது சந்தேகத்தின் பேரில், விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். தொடர்ந்து விசாரணையில், பாகிஸ்தானில் உள்ள சில நபர்களுடன் அவருக்கு தொடர்புகள் இருந்ததுடன், முக்கிய தகவல்களை அவர்களுக்கு பகிர்ந்துள்ளார் என்பது உறுதி செய்யப்பட்டது என்றார்.

இதையடுத்து, பானிப்பட்டின் தொழிற்துறை காவல் நிலையத்தில் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அவரது மொபைல் கைப்பற்றப்பட்டு, மேலும் சான்றுகள் பெற விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும்,இதுகுறித்து சில நபர்களிடம் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. “முதற்கட்ட விசாரணையிலேயே குற்றச்சாட்டுகள் உண்மையானவை எனத் தெரிய வந்ததால், வழக்கு பதிவு செய்து கைது செய்தோம்,” எனவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை சீர்குலைக்கும் வகையில் வெளிநாட்டு அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு தகவல்களை வெளியிடும் செயல்களில் சிலர் ஈடுபடுகிறார்கள் என்ற ஆபத்தான உண்மையை வெளிக்கொணர்கிறது.