விராட் கோலியின் சாதனையை சமன் செய்து, தோனியின் சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ்..

இந்திய அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் யாதவ் நேற்று தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி 20 போட்டியில் ஒரு பெரிய சாதனையைப் படைத்தார். இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்திக்க நேரிட்டாலும் சூர்யா மீண்டும் ஒருமுறை அரைசதம் (36 பந்துகளில் 56 ரன்கள்) அடித்தார்.

சூர்யகுமார் யாதவின் இன்னிங்ஸ் அணிக்கு வெற்றியை கொடுக்காவிட்டாலும் அவர் ஒரு சிறப்பு சாதனையை எட்டினார். தென்னாப்பிரிக்க மண்ணில் கேப்டனாக டி20 சர்வதேச கிரிக்கெட்டில் அரைசதம் அடித்த முதல் இந்திய கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் (எம்.எஸ். தோனி) 16 ஆண்டுகால சாதனையை முறியடித்தார்.

தோனியின் 16 ஆண்டுகால சாதனையை முறியடித்த சூர்யகுமார் யாதவ் :

தென்னாப்பிரிக்க மண்ணில் டி20 கிரிக்கெட்டில் இந்தியாவின் கேப்டனாக மிகப்பெரிய இன்னிங்ஸ் விளையாடிய சாதனை சூர்யகுமார் யாதவ் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது மற்றும் முன்னாள் இந்திய கேப்டன் எம்எஸ் தோனியின் சாதனையை முறியடித்துள்ளார். 2007-ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடந்த டி20யில் தோனி 45 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது சூர்யா அரைசதமடித்து தோனியை முந்தியுள்ளார். அதாவது, சூர்யா 56 ரன்களில் ஆட்டமிழந்ததால், தென்னாப்பிரிக்காவில் டி20ஐகளில் 50க்கும் அதிகமான ஸ்கோரை அடித்த ஒரே இந்திய கேப்டன் ஆனார்.

இரண்டாவது டி20 போட்டியில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளை எதிர்கொண்டு 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 56 ரன்கள் எடுத்தார். இது சூர்யாவின் டி20 வாழ்க்கையில் 17வது அரைசதமாகும். இதன் மூலம் சூர்யகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் 2000 ரன்களையும் கடந்துள்ளார்.

டி20யில் வேகமாக 2000 ரன்களை கடந்த பேட்ஸ்மேன்கள் :

பாபர் அசாம் – 52 இன்னிங்ஸ்

முகமது ரிஸ்வான் – 52 இன்னிங்ஸ்

விராட் கோலி – 56 இன்னிங்ஸ்

சூர்யகுமார் யாதவ் – 56 இன்னிங்ஸ்

கேஎல் ராகுல் – 58 இன்னிங்ஸ்

இது தவிர, டி20யில் 2000 ரன்களைக் கடந்த இந்திய வீரர் என்ற சாதனையை சூர்யகுமார் யாதவ் பெற்றுள்ளார். விராட் கோலியின் சாதனையை சூர்யா சமன் செய்துள்ளார். கிங் கோலியும் தனது 56 இன்னிங்ஸ்களில் டி20 சர்வதேசப் போட்டிகளில் 2000 ரன்களையும், சூர்யாவும் 2000 ரன்களை முடிக்க 56 இன்னிங்ஸ்களையும் எடுத்துக்கொண்டார். இதனால் 58வது இன்னிங்சில் இந்த சாதனையை நிகழ்த்திய கே.எல்.ராகுலை பின்னுக்கு தள்ளினார் சூர்யா.