இங்கிலாந்துக்கு எதிரான 2து டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் சொந்த மண்ணில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்நிலையில் 2வது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினத்தில் பிப்ரவரி 2ம் தேதி தொடங்கி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இந்திய அணியின் இளம் வீரர் ஜெய்ஸ்வால் சிறப்பாக ஆடி முதல் நாளில் சதத்தை கடந்தார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 2வது நாளில் டெஸ்டில் தனது முதல் இரட்டை சதத்தை பதிவு செய்தார். 22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த மூன்றாவது இளம் இந்தியர் ஆனார்.

ஜெய்ஸ்வால் 290 பந்துகளில் 19 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்களுடன் 209 ரன்கள் எடுத்தார். மேலும் முதல் இன்னிங்ஸில் சுப்மன் கில் 34 ரன்களும், ரஜத் படிதார் 32 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் அக்சர் படேல் இருவரும் தலா 27 ரன்களும் எடுத்தனர். இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 396 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தரப்பில் ஜேம்ஸ் ஆண்டர்சன் (3/47), ரெஹான் அகமது (3/65), சோயப் பஷீர் (3/138) ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து 2வது நாளில் தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணி 253 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர் சாக் கிராலி 78 பந்துகளில் 76 ரன்களும், கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 47 ரன்களும் எடுத்தனர். மேலும் ஜானி பார்ஸ்டோ 25 ரன்களும், ஒலி போப் 23 ரன்களும் எடுத்தனர். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 6 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும், அக்சர் படேல் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும் தனது 34வது டெஸ்ட் போட்டியில் பும்ரா 150 விக்கெட் மைல்கல்லை கடந்தார், டெஸ்டில் பும்ரா 152 விக்கெட்டுகளை கைப்பற்றினார். டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 150 விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார் ஜஸ்பிரித் பும்ரா.

முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இங்கிலாந்து 143 ரன்கள் பின்தங்கியிருந்தது. இதையடுத்து 143 ரன்கள் முன்னிலையுடன் 2வது நாளில் இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை ஆடியது. 2வது நாள் முடிவில் இந்திய அணியின் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் 15 ரன்களுடனும், ரோஹித் சர்மா 13 ரன்களுடனும் அவுட் ஆகாமல் கிரீஸில் இருந்தனர். 2வது நாள் முடிவில் இந்தியா 5 ஓவரில் 28 ரன்கள் எடுத்த நிலையில், 171 ரன்கள் முன்னிலையில் இருந்தது..

இதையடுத்து 3வது நாளான நேற்று ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் இந்திய அணியின் துவக்க வீரர் ரோகித் சர்மா 13 மற்றும் ஜெய்ஸ்வால் 17 ரன்களில் அவுட் ஆன போதிலும், சுப்மன் கில் சிறப்பாக விளையாடி சதமடித்தார். 147 பந்துகளில் கில் 11 பவுண்டரி, 2 சிக்சருடன் 104 ரன்கள் எடுத்தார். மேலும்  அக்சர் படேல் 45 ரன்களும், ஷ்ரேயஸ் ஐயர் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தலா 29 ரன்கள் எடுத்தனர்.மற்ற படி யாரும் பெரிய அளவில் ரன்கள் எடுக்கவில்லை. இந்திய அணி 78.3 ஓவரில் 255 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் ஹார்ட்லி 4 விக்கெட்டுகளையும், ரெஹான் அகமது 3 விக்கெட்டுகளையும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதையடுத்து 399 ரன்கள் எடுத்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி நேற்று களம் இறங்கியது. இங்கிலாந்து அணி துவக்க வீரர்களாக சாக் கிராலி மற்றும் பென் டக்கெட் இருவரும் களமிறங்கி ஆடினர். இதில் பென் டக்கெட் 28 ரன்களில் அஸ்வின் ஓவரில் கீப்பர் பரத்திடம் கேட்ச் ஆனார். 3வது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 67 ரன்களுக்கு 1 விக்கெட் இழந்திருந்தது.

இந்நிலையில் 332 ரன்கள் இங்கிலாந்தின் வெற்றிக்கு தேவைப்பட்ட நான்காவது நாளான இன்று இங்கிலாந்து அணியில் சாக் கிராலி மற்றும் ரெஹான் அகமது ஆகியோர் களமிறங்கினர். இதையடுத்து ரெஹான் அகமது (23 ரன்கள்) அக்சர் படேலிடம் எல்பிடபிள்யூவில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து ஒல்லி போப் (23) மற்றும் ஜோ ரூட் (16) ஆகிய இருவரை அஸ்வின் வெளியேற்றினார். இருப்பினும் மறுமுனையில் சாக் கிராலி அரைசதம் கடந்து கிரீஸில் நின்றார். பின் சாக் கிராலி மற்றும் ஜானி பேர்ஸ்டோ இருவரும் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடி சிறிது நேரம் நிலைத்த நிலையில், சிறப்பாக ஆடி வந்த துவக்க வீரர் சாக் கிராலி 73 ரன்களில் குல்தீப் யாதவ் சுழலில் எல்பிடபிள்யூ அவுட் ஆனார். தொடர்ந்து பேர்ஸ்டோ (26 ரன்கள்) பும்ராவிடம் எல்பிடபிள்யூ அவுட் ஆனார். உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 6 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் எடுத்து தடுமாறியது.

பின்வந்த பென் ஸ்டோக்ஸ் 11 ரன்கள் இருந்தபோது ரன் அவுட் ஆனார். அதனைத் தொடர்ந்து பென் ஃபோக்ஸ் – டாம் ஹார்ட்லி இருவரும் சேர்ந்து ஒரு சிறிய பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இந்தப் பார்ட்னர்ஷிப்பை 65 ஆவது ஓவரில் பும்ரா உடைத்தார். பென் ஃபோக்ஸ் 36 ரன்களில் அவுட் ஆனார். பின் வந்த சோயப் பஷீர் டக் அவுட் ஆனார். பின் டாம் ஹார்ட்லி 36 ரன்களில் அவுட் ஆக இங்கிலாந்து அணி 292 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 ரன்னுடன் களத்தில் இருந்தார். இதனால் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. எனவே இரு அணிகளும் 1-1 என சம நிலையில் உள்ளது. இந்திய அணியில் 2வது இன்னிங்சில் அதிகபட்சமாக அஸ்வின் 3 விக்கெட்டுகளும், பும்ரா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.