ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பை எட்டியுள்ளது. இனி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றால் தொடர் இந்தியாவின் கையில்  இருக்கும்.

இந்தியாவின் இளம் வீரர்கள் திருவனந்தபுரத்தில் அபாரமாக விளையாடி இந்தியாவை பெரிய வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. 

இந்தியா சார்பில் 3 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 58 ரன்களும், இஷான் கிஷான் 52 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தியதால், இரண்டாவது ஓவரில் அணியின் ஸ்கோர் 30 ரன்களை எட்டியது. இருப்பினும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஷார்ட் அவுட்டாக, ஆஸ்திரேலிய அணி தடம் புரண்டது. இங்கிலீஷ் 2 ரன்களில் ஆட்டமிழக்க, மேக்ஸ்வெல் 12 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஸ்மித்தும் 19 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஸ்டோய்னிஸ் மற்றும் டிம் டேவிட் ஆகியோர் அரை சத பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினர், ஆனால் டேவிட் ஆட்டமிழந்த பிறகு, இந்தியாவின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. டேவிட் 37 ரன்களும், ஸ்டோனிஸ் 45 ரன்களும் எடுத்தனர். இறுதியில், மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார், ஆனால் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

கடைசி 7 ஓவர்களில் இந்திய வீரர்கள் 111 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் கடைசி 7 ஓவர்களில் 111 ரன்கள் எடுக்க, 4 விக்கெட்டுக்கு 235 ரன்கள் குவித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் (53 ரன், 25 பந்து), ருதுராஜ் கெய்க்வாட் (58 ரன், 43 பந்து), இஷான் கிஷான் (52 ரன், 32 பந்து) ஆகியோரின் அரை சதம் இந்தியாவை பெரிய ஸ்கோருக்கு அழைத்துச் சென்றது. கடைசி ஓவர்களில், 9 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் குவித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தார் ரிங்கு சிங். அதேபோல மிடில் ஆர்டரில் சூர்யகுமார் யாதவ் 10 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். கடைசியில் திலக் வர்மா ஒரு சிக்சருடன் 2 பந்தில் 7 ரன்களுடன் ரிங்கு சிங்குடன் அவுட் ஆகாமல் இருந்தார்..

ஜெய்ஸ்வால் ஒரு அதிரடி தொடக்கம் கொடுத்தார் :மேத்யூ வேட் டாஸ் வென்று இந்தியாவை பேட்டிங் செய்ய அழைத்தார், ஆனால் ருதுராஜ் கெய்க்வாடுடன் ஓப்பன் செய்ய வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் தனது புயல் இன்னிங்ஸால் மிரட்டினார். சீன் அபோட் வீசிய 4வது ஓவரில் முதல் 3 பந்துகளில் பவுண்டரிகளும், அடுத்த 2 பந்துகளில் சிக்ஸர்களும் அடித்து 24 ரன்கள் எடுத்தார். இந்தியா 3.5 ஓவரில் 50 ரன்களைக் கடந்தது. எல்லிஸ் வீசிய 6வது ஓவரில், யஷஸ்வி 24 பந்துகளில் தொடர்ந்து 3 பவுண்டரிகள் அடித்து அரை சதத்தை பூர்த்தி செய்தார். டி20யில் இது அவரது இரண்டாவது அரைசதமாகும், ஆனால் எல்லிஸ் பந்தில் மேலும் ஒரு பவுண்டரி அடிக்கும் முயற்சியில், அவர் ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச் ஆனார். அவர் 25 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் எடுத்தார். இந்தியா 6 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 77 ரன்கள் எடுத்தது.

இஷான் தனது 6வது டி20 அரை சதத்தை அடித்தார் :

ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ரன்களை கட்டுப்படுத்தினர். இந்தியா 9.5 ஓவரில் 100 ரன்களை எட்டியது. பவர்பிளேக்குப் பிறகு, அடுத்த 6 ஓவர்களில் இந்தியா 39 ரன்கள் எடுத்தது, ஆனால் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷான் விக்கெட்டில் இருந்தனர். அப்போது ஸ்டோய்னிஸ் ஓவரில் இஷானும் ஒரு சிக்ஸர் அடித்தார். இருவரும் 46 பந்துகளில் அரைசத பார்ட்னர்ஷிப்பை நிறைவு செய்தனர். பார்ட்னர்ஷிப் முடிந்தவுடன், இஷான் 95 மீட்டர் சிக்ஸரையும், பின்னர் மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஒரு பவுண்டரியையும் அடித்தார். இந்த ஓவரில் கெய்க்வாட் தனது முதல் சிக்ஸரை அடித்தார். இந்த ஓவரில் 23 ரன்கள் வந்தது. இஷான் தனது 6வது டி20 அரைசதத்தை (29 பந்துகளில்) சங்கா ஓவரில் சிக்ஸர் அடித்து பூர்த்தி செய்தார். இந்திய அணியின் ஸ்கோர் 15 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 164 ரன்கள். 14வது மற்றும் 15வது ஓவரில் மொத்தம் 40 ரன்கள் வந்தது.

ருதுராஜ் -இஷான் ஜோடி 87 ரன்கள் எடுத்தது :

ஸ்டோனிஸின் வைட் பந்தில் சிக்ஸர் அடிக்க முயன்றபோது இஷான் எல்லையில் கேட்ச் ஆனார். அவர் 32 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்தார். ருதுராஜ் உடன் இணைந்து 87 ரன்கள் எடுத்தார். கேப்டன் சூர்யகுமார் வந்தவுடனே ஸ்டோய்னிசையும், பின்னர் ஜம்பாவையும் சிக்ஸருக்கு அடித்தார். இதன்பிறகு, தொடக்க ஆட்டக்காரர் கெய்க்வாட் 39 பந்துகளில் தனது 3வது டி20 அரை சதத்தைப் பூர்த்தி செய்தார். பின் எல்லிஸ் ஓவரில் சூர்யகுமார் (19 ரன்கள்) ஸ்டோய்னிஸிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். ரிங்கு சிங் 19வது ஓவரில் அபோட் பந்துவீச்சில் 2 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடிக்க ஸ்கோர் 200 ரன்களை கடந்தது. இந்த ஓவரில் 25 ரன்கள் வந்தது.