முதல் போட்டியில் ரன் அவுட் ஆன பிறகு ருதுராஜிடம் மன்னிப்புக் கேட்டேன் என கூறி நெகிழ வைத்துள்ளார் இளம் வீரர் ஜெய்ஸ்வால்..

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 2வது போட்டியில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி தொடரை கைப்பற்றும் வாய்ப்பை எட்டியுள்ளது. இனி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் இந்தியா வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றும்.

திருவனந்தபுரத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த இந்தியா 4 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்தது. இந்திய அணி  சார்பில் 3 பேட்ஸ்மேன்கள் அரைசதம் அடித்தனர். யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிரடியாக 25 பந்துகளில் (9 பவுண்டரி, 2 சிக்ஸர்) 53 ரன்களும், ருதுராஜ் கெய்க்வாட் 43 பந்துகளில் 58 ரன்களும், இஷான் கிஷான் 32 பந்துகளில் 52 ரன்களும் எடுத்தனர். இறுதியில் ரிங்கு சிங் 9 பந்துகளில் 31 ரன்கள் எடுத்தார்.

மேலும் சூர்யகுமார் யாதவ் 19 ரன்களும், திலக் வர்மா 7 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா தரப்பில் நாதன் எல்லிஸ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஒரு விக்கெட் வீழ்த்தினார். பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி 191 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக ஸ்டோய்னிஸ் 45 ரன்களும், டிம் டேவிட் 37 ரன்களும், எடுத்தனர். இறுதியில், மேத்யூ வேட் ஆட்டமிழக்காமல் 42 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அர்ஷ்தீப் சிங், அக்சர் படேல், முகேஷ் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

இந்த வெற்றிக்கு பிறகு பேசிய இந்திய இளம் வீரர் ஜெய்ஸ்வால்,  இது எனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது. நான் எனது எல்லா ஷாட்களையும் விளையாட முயற்சித்தேன். எனது முடிவுகளில் நான் உறுதியாக இருந்ததால் அச்சமின்றி இருக்க முயற்சித்தேன், தாராளமாக போய் விளையாடுங்கள் (தனது கிரிக்கெட் பாணியில்) என்று சூர்யா பாய் மற்றும் விவிஎஸ் சார் என்னிடம் சொன்னார்கள். என்னை வெளிப்படுத்தும்படி கேட்டுக் கொள்ளப்பட்டேன்.”என்னைப் பொறுத்தவரை, நான் (ஒரு கிரிக்கெட் வீரராக) வளர முடியும் என்று நினைக்கிறேன், நான் வேறு எதையும் பற்றி யோசிக்கவில்லை. நான் இன்னும் கற்றுக் கொண்டிருக்கிறேன்,” என்றார்

மேலும் ஜெய்ஸ்வால், விசாகப்பட்டியில் நடந்த முதல் டி20 போட்டியில் தனது தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜ் ரன் அவுட் ஆனதற்கு மன்னிப்புக் கேட்டதாகவும் கூறினார். “கடைசி ஆட்டத்தில் இது என் தவறு, நான் ருது பாயிடம் மன்னிப்புக் கேட்டேன். நான் தவறான அழைப்பு விடுத்தேன். கேம்களில் அது நடக்கும் , அது என் தவறு என்று ஏற்றுக்கொண்டேன். ருது பாய், நாங்கள் ஓடும்போது, ​​பாதுகாப்பான சிங்கிள்களை எடுப்போம் என்றார். ருது பாய் மிகவும் பணிவானவர் மற்றும் மிகவும் அக்கறையுள்ளவர், அவர் என்னை மிகவும் ஆதரிக்கிறார், நான் உண்மையில் எனது உடற்தகுதிக்காக உழைத்தேன். எனது எல்லா ஷாட்களையும் உருவாக்க முயற்சிக்கிறேன். மனதளவில் நான் வேலை செய்து கொண்டிருக்கிறேன். எனது பயிற்சி அமர்வுகளை நான் நம்புகிறேன்” என்றார்.