
டெல்லியின் ஷாஹ்தாரா மெட்ரோ நிலையத்தில், பெண் கான்ஸ்டபிளும், டெல்லி காவல்துறையில் பணியாற்றும் சப்-இன்ஸ்பெக்டரும் ஆட்சேபனைக்குரிய சூழ்நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரும், தனது மனைவியை அழைத்துச் செல்ல மெட்ரோ நிலையத்திற்கு வந்தபோது, அவரை இந்த நிலைமையில் பார்த்துள்ளார்.
பின்னர் அவர் தனது மனைவியிடமும், இன்ஸ்பெக்டரிடமும் இதைப் பற்றி கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையில் வாக்குவாதம் வெடித்துள்ளது. இந்த வாக்குவாதம் கடுமையாக மாறிய நிலையில், அந்த இன்ஸ்பெக்டர் தனது தலைமைக் காவலரான சக ஊழியரை அழைத்து வர செய்துள்ளார். இருவரும் சேர்ந்து அந்த பெண் கான்ஸ்டபிளின் கணவரை பொதுமக்கள் முன்னே தாக்கியுள்ளனர்.
இதனால் மெட்ரோ ரயில் நிலையம் பரபரப்பு மையமாக மாறியது. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கணவர் PCR மூலம் காவல்துறையினரிடம் தகவல் அளித்தார். போலீசார் விரைந்து வந்து, சம்பவத்தை கட்டுப்படுத்தினர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் டெல்லி தென்கிழக்கு மாவட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் என்றும், அவர் ஏற்கனவே திருமணமானவர் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், பெண் கான்ஸ்டபிளும் டெல்லியில் உள்ள ஏசிபி அலுவலகத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இந்த இருவரும் ஒரே இடத்தில் பணியாற்றிய காலத்தில் நெருக்கம் அதிகரித்து, அது காதலாக வளர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பாதிக்கப்பட்ட கணவர் அளித்த புகாரின் அடிப்படையில், இந்த சம்பவம் முழுமையாக விசாரிக்கப்படுகிறது. “என் மனைவியுடன் இன்ஸ்பெக்டர் நட்பு கொண்டிருப்பது தெரியாமலில்லை. ஆனால் அது வேலை ரீதியாக இருப்பதால் முக்கியத்துவம் கொடுக்கவில்லை. ஆனால் அவர்களை மெட்ரோ ஸ்டேஷனில் அந்த நிலைமையில் பார்த்ததும் அதிர்ச்சியடைந்தேன்” என கூறியுள்ளாராம் கணவர்.
இந்த விவகாரம் தற்போது டெல்லி காவல்துறையில் ஒழுக்கக்குழுவால் விசாரிக்கப்படுகிறது. சட்டத்துக்கு புறம்பான நடத்தை மேற்கொண்ட இந்த அதிகாரிகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.