தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியிருந்ததாவது, வேலூர் மாவட்ட தமிழக பாஜக மாவட்ட நிர்வாகியான வி.விட்டல் குமார் கடந்த 16ம் தேதி திமுக ரவுடிகளால் படுகொலை செய்யப்பட்டார். இவருக்கும், நாகல் ஊராட்சி மன்ற தலைவரான N.பாலாசேட்டு என்பவருக்கும் பொதுமக்கள் பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்து வந்ததில் தகராறு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் ஈடுப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய கோரி மாவட்ட பாஜகவினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் திமுக ஊராட்சி மன்ற தலைவரான பாலாசேட்டுவின் மகனின் வாகன ஓட்டுனரும், அவருடைய நண்பரும் இன்று நீதிமன்றத்தில் சரணடைய உள்ளனர்.

இதன் மூலம் தெரிகிறது விட்டல் குமார் கொலைக்கு திமுக காரணம் என்று. தமிழக முழுவதும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. நீதிமன்ற வளாகம், அரசு அலுவலகம் என எந்த இடத்திலும் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை திமுகவோ தனது கட்சியில் சமூக விரோதிகளுக்கு பதவியும், அதிகாரமும் கொடுக்கின்றனர். உடனடியாக விட்டல் குமார் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தங்களுடைய கட்சிக்காரர்கள் என்பதற்காக சமூக விரோதிகளை கண்டுகொள்ளாமல் இருந்தால் அதற்கான எதிர்வினைக்கும் திமுக தான் பொறுப்பு என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.