
குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரலி மாவட்டத்தில் கோவயா கிராமத்தில் நேற்று நள்ளிரவில் சிங்கம் ஒன்று வீட்டு சமையலறைக்குள் புகுந்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கோவயா கிராமத்தில் வசித்து வந்த முலு லகோத்திரா என்பவரின் வீட்டில் நேற்று நள்ளிரவு 1 மணி அளவில் சமையலறைக்குள் ஏதோ சத்தம் கேட்டதை வைத்து வீட்டில் உள்ளவர்கள் அதனை ஒரு சாதாரண பூனை என எண்ணினர்.
ஆனால் சிங்கம் ஒன்று சமையலறையின் சுவருக்கு மேல் உள்ள இரும்பு கட்டமைப்புக்குள் மாட்டிக் கொண்டது தெரியவந்தது. இதனைக் கண்ட வீட்டில் உள்ளவர்கள் பதறி அடித்து அலறியுள்ளனர். அந்த அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் சில நிமிடங்களில் லகோத்திரா வீட்டு முன்பு திரண்டனர். சமையலறைக்குள் பலர் டார்ச் லைட்டுகளை அடித்து சிங்கத்தை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
Lion breaks into Indian home like a scene from Tom & Jerry.#Wildlife #CloseCall #Unbelievable #Viral #News #HKeye pic.twitter.com/hlqQZdqxgL
— HKeye (@HKeye_) April 3, 2025
இதுகுறித்து அறிந்த கிராமத்தலைவர் ஜினா லகோத்திரா உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைவாக சென்று சுவற்றுக்கு இடையில் மாட்டிக்கொண்ட சிங்கத்தை பாதுகாப்பாக மீட்டு அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து வனத்துறைக்காப்பாளர் ஜெயன்படேல் கூறியதாவது, இந்த சிங்கம் 6 சிங்கங்கள் கொண்ட ஒரு குழுவில் ஒன்றாகும். இவை சில நேரங்களில் இரைத்தேடுவதற்காக கிராமங்களுக்குள் நுழைகின்றன. ஆனால் வீட்டுக்குள் நுழையும் சம்பவங்கள் மிகவும் அபூர்வமானவை. அம்ரலி மாவட்டம் வனப்பகுதிக்கும், கடற்கரையோர பகுதிக்கும் அருகில் இருப்பதால், சிங்கங்களின் நடமாட்டம் கிராமங்களுக்குள் அடிக்கடி காணப்படுகின்றன என தெரிவித்துள்ளார். மேலும் அம்ரெலி மாவட்டத்தில் 150 சிங்கங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.