
உத்தரபிரதேச மாநிலம் ஹமீர்பூர் மாவட்டத்தில் ஏற்பட்ட ஒரு பரபரப்பான சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. ரத் நகரத்தில் உள்ள சிக்கந்தர்புரா பகுதியில் வசிக்கும் ராம் நாராயண் விஸ்வகர்மா என்பவர் தனது மருமகள் அமிர்தா மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.
அதில், “மருமகள் அடிக்கடி குடும்பத்தில் சண்டை போட்டு, என்னையும் என் மகனையும் வெட்டி, உடலை நீல டிரம்மில் போடுவதாக மிரட்டுகிறார்” என கூறியுள்ளார். இந்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
அமிர்தா மற்றும் தீபக் என்ற தம்பதிகள் சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்ட நிலையில், திருமணத்திற்கு பின் வீட்டு சூழ்நிலை முற்றிலும் சீர்கேடாகி விட்டதாக மாமனார் கூறுகிறார். அமிர்தா தனது கணவரையும் மாமனாரையும் அடிக்கடி தாக்குவதாகவும், மாமனாரை அடித்துவிட்டு, அவரை காப்பாற்ற வந்த மகளையும் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இப்படியான தாக்குதல்களில் இருந்து தப்பிக்க, ராம் நாராயண் மற்றும் அவரது மகன் தீபக் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையம் தொடர்பு கொண்ட மாமனார், அதிகமான பதட்டத்துடன் புகார் அளித்ததாகவும், மருமகள் தனது செயல்களில் முற்றிலும் கட்டுப்பாடின்றி செயல்படுவதாகவும் கூறினார்.
இதன் அடிப்படையில் போலீசார் அமிர்தாவிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். புகாரின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் ஹமீர்பூர் மாவட்டத்தில் பெரும் கவலையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.