செய்தியாளர்களிடம் பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன், அண்ணாவையோ, அம்மாவையோ விமர்சனம் பண்ணினார். என்ன விமர்சனம் செய்தார் ? அறிஞர் அண்ணா அவர்கள் 1956-இல் மதுரையில் பிடி.ராஜன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதெல்லாம் எங்களுக்கு தெரியும். அவர் பகுத்தறிவை பேசினார். அடுத்த நாள்  பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்கள் ஆன்மீக கருத்தை வலியுறுத்தி,  அறிஞர் அண்ணா அவர்களை மறுதலித்து பேசினார்.

அதற்கு அடுத்த நாள் மதுரை தமுக்கம் மைதானத்தில் அறிஞர் அண்ணா அவர்கள் பொதுக்கூட்டம். அதிலே முத்துராமலிங்கத் தேவர் அவர்களை தாக்குவார் என்று எல்லோரும் கூறினார்கள். ஆனால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் வரை அண்ணா அவர்கள் பேசினார். அவரைப் பற்றி ஒரு சொல் கூட சொல்லவில்லை.

ஏனென்றால் பகையை வளர்ப்பதை அறிஞர் அண்ணா அவர்கள் விரும்பியதே கிடையாது. ஆகவே இதுதான் நடந்தது. மறைந்த தவறுகளை பற்றி சொல்லுகிற போது சரியான தகவல்களை எடுத்துச் சொல்ல வேண்டும். பாஜக தலைவர் அண்ணாமலையை எடுத்த தகவல்கள் தவறானவை. ஆனால் அதை உள்நோக்கத்தோடு எடுத்து சொன்னார் என்று நான் சொல்ல தயாராக இல்லை. ஆனால் இப்போது ஏற்பட்டிருக்கக் கூடிய பிரச்சனை அறிஞர் அண்ணா அவர்களால் வந்த பிரச்சனை அல்ல.

அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி அவர் விமர்சித்து நான்கு நாள் கழித்து இவர்கள் பிரச்சினையை கிளப்புகிறார்கள். என்ன காரணம் ? திருடு போய் நான்கு நாள் கழித்து வீட்டு நாய் குலைக்கிறது என்றால் ? அந்த நாயை வைத்துக் கொண்டு இருக்க முடியுமா ? உண்மையில் என்ன  நடந்தது என்றால் ? அறிஞர் அண்ணா அவர்களைப் பற்றி அவர்கள் பேசிய பிறகு,  பாஜக தலைவர் அண்ணாமலை ஒன்றைச் சொன்னார்…

அது என்ன என்றால் ? 2026 தேர்தலில் எங்கள் கட்சி ஆட்சிக்கு வரும். நாங்கள்  வருவோம். அதுதான் பிரச்சனை. 2026 இல் பாஜக ஆட்சிக்கு வரும். அதற்காக நான் பாடுபடுவேன் என்று அண்ணாமலை சொன்னார். அப்போதுதான் எடப்பாடி பழனிச்சாமி விழித்துக் கொண்டார். அப்போ நான் மாப்பிள்ளை இல்லையா ? அதுதான் பிரச்சனை.

அறிஞர் அண்ணா அவர்களை பற்றி பேசியதோ,  புரட்சித்தலைவியை பற்றி பேசியது பற்றியோ எடப்பாடி பழனிச்சாமி கவலைப்படவில்லை. எடப்பாடியை 2026 இல் முதலமைச்சராக ஆக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதுதான் பிரச்சனை.  தன்னை முன்னிலைப்படுத்தி, தான் முதல் மந்திரியாகனும் என்பது தான் அவருக்கு எப்போதுமே பிரச்சனை என தெரிவித்தார்.