சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் கடந்த வெள்ளிக்கிழமை தமிழகத்தில் பல்வேறு துறைகளில் சாதித்த மகளுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆளுநரின் மனைவி லட்சுமி ரவி, ஆளுநரின் முதன்மைச் செயலாளர் ஆனந்த் ராவ் பாட்டில் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என் ரவி பரிசுகளை வழங்கி கூறியபோது, இந்தியா வளர வேண்டும் என்றால் தலைமை பொறுப்புக்கு மகளிர் வரவேண்டும். மகளிருக்கு உரிய வாய்ப்பளிக்காத  எந்த நாடும், சமுதாயமும் வளர்ச்சி பெறாது. இதனை முன்பே உணர்ந்த மகாகவி பாரதியார் மகளிர்க்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி அதிகமாக எழுதியிருக்கிறார்.

கடந்த 2010 -ஆம் ஆண்டுக்குப் பின் நடைபெற்ற தேர்தல்களில் மகளிர் வாக்குகள் முக்கிய பங்கு வகித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கணவர் கூறும் கட்சிக்கு அவர்கள் வாக்களிப்பது இல்லை. அதற்கு மாறாக தாங்கள் விரும்பும் கட்சிக்கு வாக்களித்து வருகின்றனர். இதுவே மிகப்பெரிய மாற்றம். ஒரு இந்திய பொருளாதார வளர்ச்சியை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகிறது. அதே வேகத்தில் பொருளாதார வளர்ச்சி இருந்தால் அடுத்த 25 வருடங்களில் பொருளாதார வலிமை மிக்க நாடுகளில் பட்டியலில் இந்தியா முதலிடம் பெறும். கடந்த எட்டரை ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவில் 55 சதவீத மக்கள் கழிப்பறை வசதி இல்லாமல் இருந்தனர். தற்போது பெரும்பாலான வீடுகளில் கழிப்பறை வசதிகள் இருக்கிறது. மேலும் பெண்களுக்கு ராணுவம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டு இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.