சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ள புதிய டி20 தரவரிசைப் பட்டியலில், இந்திய இளம் வீரர்கள் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் முதல் இரண்டு இடங்களைக் கைப்பற்றி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளனர். சமீபத்தில் முடிவடைந்த டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப்போட்டியில் 21 பந்துகளில் 52 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா, 875 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.
மேலும் அவரைத் தொடர்ந்து, தொடர் முழுவதும் அதிரடி காட்டிய இஷான் கிஷன், தரவரிசையில் முன்னேறி 871 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். ஐசிசி தரவரிசை வரலாற்றில் இந்திய வீரர்கள் ஒரே நேரத்தில் முதல் இரண்டு இடங்களை ஆக்கிரமிப்பது இதுவே முதல் முறையாகும். இந்த புதிய பட்டியலில் பாகிஸ்தானின் சஹிப்சதா ஃபர்ஹான் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இதனால் உலகக் கோப்பை தொடரின் நாயகனாகத் தேர்வான சஞ்சு சாம்சன், தனது சிறப்பான ஆட்டத்தால் 18 இடங்கள் முன்னேறி 22-வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். பந்துவீச்சாளர்கள் பட்டியலில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி முதலிடத்திலிருந்து இரண்டாம் இடத்திற்குச் சரிந்துள்ளார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார். எனினும், இறுதிப்போட்டியின் ஆட்டநாயகன் ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் முன்னேறி 6-வது இடத்தைப் பிடித்துள்ளார். இந்தியாவின் இந்த இரட்டைச் சாதனை சமூக வலைதளங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
